2ஜி ஊழல் வழக்கில் சி.பி.ஐ. நீதிபதி பரபரப்பு தீர்ப்பு – கனிமொழி, ராசா உள்ளிட்ட அனைவரும் விடுதலை!


ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது (2004-2009 மற்றும் 2009-2014) 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் பெருமளவில் ஊழல் நடைபெற்றதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக, உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில் சிபிஐ விசாரணை நடத்தியது. இதையடுத்து, மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி, மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த ஆ.ராசா உள்ளிட்ட 14 பேர் மீதும், 3 தனியார் நிறுவனங்கள் மீதும் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. அமலாக்கப்பிரிவும் தனியாக விசாரணை நடத்தியது.

டெல்லியில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் சிறப்பு நீதிபதி ஓ.பி.ஷைனி முன்னிலையில் இவ்வழக்கின் விசாரணை நடைபெற்றது. கடந்த ஆறு ஆண்டுகளாக நடைபெற்று வந்த இவ்வழக்கின் இறுதிக்கட்ட வாதங்கள் கடந்த ஏப்ரல் மாதம் நிறைவடைந்தன. அதன்பின்னர் குற்றம்சாட்டப்பட்டவர்கள், சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப் பிரிவு தரப்பு ஆகியோர் தங்கள் தரப்பு வாதங்களை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்யுமாறு நீதிபதி ஷைனி உத்தரவிட்டார். எழுத்துப்பூர்வ வாதங்கள் தாக்கல் செய்தபின்னர் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

தீர்ப்பு எழுதும் பணி தாமதமானதால் தீர்ப்பு தேதியை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது. மூன்று முறை தீர்ப்பு தேதி ஒத்திவைக்கப்பட்ட பின்னர், டிசம்பர் 21-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி ஓ.பி.ஷைனி அறிவித்தார். தீர்ப்பு வழங்கப்படும் நாளில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.


அதன்படி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு வழங்கும் நடைமுறைகள் தொடங்கின. காலை 10.30 மணிக்கு நீதிபதி தீர்ப்பை வாசிப்பார் என்று கூறப்பட்டது. குற்றம்சாட்டபட்ட கனிமொழி. ஆ.ராசா உள்ளிட்டோர் நீதிமன்றத்திற்கு வந்தனர். துரைமுருகன், திருச்சி சிவா, ராஜாத்தியம்மாள், சுப்பிரமணிய சுவாமி மற்றும் வழக்கில் தொடர்புடைய நபர்களும் வந்தனர்.

இந்நிலையில், நாடே எதிர்பார்த்த 2ஜி வழக்கின் தீர்ப்பை நீதிபதி ஓ.பி.ஷைனி காலை 10.50 மணிக்கு வாசித்தார். இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரையும் விடுவித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். குற்றச்சாட்டுகளை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க சி.பி.ஐ. தவறிவிட்டதாக நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார். இந்த தீர்ப்பை கேட்டதும் தி.மு.க.வினர் உற்சாகம் அடைந்தனர்.

தீர்ப்பு வெளியாவதையொட்டி நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தமிழகத்தில் இருந்து வந்திருந்த தி.மு.க. தொண்டர்கள் நீதிமன்ற வளாகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.-Source:maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!