விமல் ஆளுங்க… காப்பாற்றுங்கள் ஹரி… ரத்தத்தால் பாத்ரூமில் எழுதிவிட்டு மாயமான பெண்..!


மாயமான பெண்ணை போலீசார் சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.”என்னை காப்பாற்றுங்கள் ஹரி” என்று ரத்தத்தால் பாத்ரூமில் எழுதி வைத்து விட்டு மாயமான பெண், திடீரென போலீசில் சரண் அடைந்துள்ளார். இதையடுத்து அவர் சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சேலத்தில் வீட்டின் குளியலறையில் ரத்தத்தால் தன்னை காப்பாற்றுங்கள் என எழுதிவைத்த பெண், காணாமல் போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் சின்ன திருப்பதி பகுதியில் உள்ள சந்திரா கார்டன் குடியிருப்பில் வசித்து வருபவர் ஹரிஹரன். இவரது மனைவி தமிழ்ச்செல்வி. ஹரிஹரன் ஜவுளி தொழில் செய்து வருகிறார்.

கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி, வழக்கம்போல வேலை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்த ஹரிஹரன், மனைவி இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அப்போது தன் வீட்டு பாத்ரூமில் “விமல் ஆளுங்க… காப்பாற்றுங்கள் ஹரி…” என்று தமிழ்செல்வி ரத்தத்தினால் எழுதி இருந்ததை கண்டு அதிர்ந்தார். பாத்ரூமில் ரத்தக்கறை படிந்த ஹாக்கி ஸ்டிக் ஒன்றும் விழுந்துகிடந்தது. இதுகுறித்து, அஸ்தம்பட்டி போலீசிலும் ஹரிஹரன் புகார் தந்தார்.

தகவலறிந்து வந்த போலீசார், தமிழ்செல்வி பாத்ரூம் சுவற்றில் எழுதி இருந்த வாசகங்கள், ரத்தக்கறை படிந்த ஹாக்கி மட்டை ஆகியவை குறித்து ஆய்வு செய்தனர். மேலும் தமிழ்செல்வி கொலை செய்யப்பட்டு இருக்கலாமோ என்றும் சந்தேகித்தனர். அதனால் தடயவியல் நிபுணர்கள், மோப்ப நாய் உதவி கொண்டு விசாரணையை தீவிரப்படுத்தினர்.

ரத்தக்கறையில் எழுதப்பட்ட விமல் என்பவர் யார் என்று தெரியவில்லை. இதையடுத்து, ஹரிஹரன், சம்பந்தப்பட்ட விமல் ஆகியோரிடமும் விசாரணை நடந்து வந்தது. ஆனால் ஹரிஹரன் போலீசாரின் கேள்விகளுக்கு சரியாக பதில் சொல்லவில்லை என தெரிகிறது. முன்னுக்கு பின் முரணாகவே பதில் அளித்ததால், அவர் மீதான சந்தேகம் போலீசாருக்கு குறையவே இல்லை.

இந்நிலையில், கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்ட தமிழ்செல்வி திடீரென நேற்றிரவு கன்னங்குறிச்சி போலீசில் சரணடைந்தார். தமிழ்செல்வி ஓமலூரில் உள்ள தனது மகளிடம் இதுநாள் வரை தங்கியிருந்ததாக போலீசாரிடம் அப்போது தெரிவித்தார்.

சரண் அடைந்த தமிழ்செல்வியை போலீசார் இன்று சேலம் மகளிர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது, தங்களுக்குள் நிறைய தகராறு, சண்டை வந்ததாகவும், கணவருடன் வாழ விருப்பமில்லை என்பதால்தான் தலைமறைவு ஆகிவிட்டதாகவும் கோர்ட்டில் தமிழ்செல்வி தெரிவித்தார்.-Source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!