42 ஆண்டு கால உலக பேட்மிண்டனில் ‘தங்க மங்கை’ சிந்து சாதனை..!


25-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சுவிட்சர்லாந்தின் பாசெல் நகரில் கடந்த ஒரு வார காலமாக நடந்து வந்தது.

இதில் நேற்று அரங்கேறிய பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் 5-ம் நிலை வீராங்கனையான இந்தியாவின் பி.வி.சிந்து, தரவரிசையில் 4-வது இடம் வகிக்கும் ஜப்பானின் நஜோமி ஒகுஹராவுடன் மோதினார்.

பலம் வாய்ந்த வீராங்கனைகள் கோதாவில் குதித்ததால் களத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆட்டத்தின் போக்கு அதற்கு நேர்மாறாக அமைந்தது.

‘தங்க மங்கை’ சிந்து

இதில் தொடக்கம் முதலே சிந்துவின் கை வெகுவாக ஓங்கியது. ஆக்ரோஷமாக ஆடிய சிந்துவின் சில ஷாட்டுகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஒகுஹரா திணறினார். இதே போல் வலை அருகே சென்ற பந்தை மெதுவாக தட்டி விடுவதிலும் சிந்து கச்சிதமாக செயல்பட்டு புள்ளிகளை குவித்தார். முதல் செட்டை எளிதில் வசப்படுத்திய சிந்து, 2-வது செட்டிலும் ஒகுஹராவுக்கு எந்த வாய்ப்பையும் வழங்காமல் அதே வேகத்தில் கபளகரம் செய்தார்.

முடிவில் பி.வி.சிந்து 21-7, 21-7 என்ற நேர் செட் கணக்கில் ஒகுஹராவை பந்தாடி தங்கப்பதக்கத்தை முத்தமிட்டார். ஒரு தரப்பாக நகர்ந்த இந்த ஆட்டம் 38 நிமிடங்கள் மட்டுமே நடந்தது.

முதல்முறையாக….

இதே ஒகுஹராவிடம் தான் சிந்து 2017-ம் ஆண்டு இறுதி ஆட்டத்தில் 110 நிமிடங்கள் போராடி வீழ்ந்தார். அந்த தோல்விக்கு இப்போது பழிதீர்த்துக் கொண்டார்.

42 ஆண்டு கால உலக பேட்மிண்டன் வரலாற்றில் இந்தியர் ஒருவர் தங்கப்பதக்கத்தை உச்சிமுகர்வது இதுவே முதல் முறையாகும். கடந்த 2 ஆண்டுகளாக தொடர்ந்து இறுதி ஆட்டத்தில் தோல்வி கண்ட சிந்து, இந்த முறை தவறுக்கு இடம் கொடுக்காமல் விளையாடி தனது கனவை நனவாக்கி இருக்கிறார்.

ஐதராாத்தை சேர்ந்த 24 வயதான சிந்து உலக பேட்மிண்டனில் வெல்லும் 5-வது பதக்கம் இதுவாகும். ஏற்கனவே 2013, 2014-ம் ஆண்டுகளில் வெண்கலமும், 2017, 2018-ம் ஆண்டுகளில் வெள்ளியும் வென்று இருந்தார். இதன் மூலம் உலக பேட்மிண்டனில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் அதிக பதக்கங்களை மகசூல் செய்த வீராங்கனையான முன்னாள் ஒலிம்பிக் சாம்பியன் சீனாவின் ஜாங் நிங்கின் (ஒரு தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம்) சாதனையை சிந்து சமன் செய்தார்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!