இறந்து போன கர்ப்பிணி மனைவியின் முகத்தை பார்க்க 13 நாட்களாக காத்திருக்கும் தொழிலாளி..!


நிலச்சரிவில் சிக்கி இறந்துபோன கர்ப்பிணி மனைவியின் உடலை மீட்க கண்ணீருடன் விவசாயி காத்திருக்கும் சம்பவம் நெஞ்சை கசக்கி பிழிவதாக உள்ளது.

பயங்கர நிலச்சரிவு

இந்த சோக சம்பவம் கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் தான் கடந்த சில நாட்களாக அரங்கேறி வருகிறது. ஆம் கடந்த ஆண்டு (2018) மே மாதம் இறுதியிலும் குடகு மாவட்டத்தில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டும், நிலச்சரிவில் சிக்கியும் 15-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருந்த இடம் தெரியாமல் உருக்குலைந்துபோனது. இதில் 15-க்கும் மேற்பட்டோர் சிக்கி பலியாகினர். அந்த சோக சுவடுகள் மறைவதற்குள் தற்போது கொட்டி தீர்த்த கனமழையாலும், வெள்ளத்தாலும் குடகு மாவட்ட மக்கள் சொல்லொண்ணா துயரில் சிக்கியுள்ளனர்.

கடந்த 8-ந்தேதி கொட்டி தீர்த்த கனமழை மற்றும் வெள்ளத்தால் விராஜ்பேட்டை தாலுகா கோரங்காலா, தோரா ஆகிய இரு கிராமங்களில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்து, மண், கற்களால் மூடிப்போனது. இதில் 10-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மேலும் சிலரை காணவில்லை. அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

6 மாத கர்ப்பிணி

நிலச்சரிவால் பயங்கரமாக பாதிக்கப்பட்டுள்ள பகுதியான தோராவை சேர்ந்தவர் ஹரீஷ் (வயது 35). இவர் அந்த பகுதியை சேர்ந்த பொண்ணப்பா என்பவரின் தோட்டத்தில் கூலி வேலை பார்த்து வந்தார். இவரது தாய், உறவினர் லீலா, ஹரீசின் மனைவி வீனா ஆகியோர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தனர். அவர்கள் உள்பட 6 பேரின் உடல்கள் இதுவரை கிடைக்கவில்லை. அவர்களது உடல்களை தேடும் பணி நடந்து வருகிறது.

இதில் வீனா 6 மாத கர்ப்பமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தோரா பகுதியை சேர்ந்த மக்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர். மேலும் 6 மாத கர்ப்பிணியான மனைவி வீனாவை இழந்த ஹரீஷ் கண்ணீர் விட்டு கதறியடி உள்ளார். உடல்களை தேடுவதற்காக நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் பொக்லைன் எந்திரங்கள் உதவியுடன் மீட்பு பணி நடந்து வருகிறது.

கண்ணீருடன் காத்திருக்கும் தொழிலாளி

ஆனால் அந்தப் பகுதியில் அதிகளவில் சேறும், சகதியுமாக உள்ளது. அத்துடன் அவ்வப்போது மழையும் பெய்து வருகிறது. இதனால் மீட்பு பணிகள் தாமதமாகி வருகிறது.

இருப்பினும் மீட்பு பணி நடைபெறும் பகுதியில் நின்றபடி ஹரீஷ் தனது மனைவி, குடும்பத்தினரின் உடல்கள் கிடைத்துவிடாதா? என்ற ஏக்கத்துடனும் கண்ணீருடனும் காத்திருந்து வருகிறார். நெஞ்சை கசக்கி பிழியும் இந்த காட்சி 13 நாட்களாக தோரா கிராமத்தில் அரங்கேறி வருகிறது.

முகத்தை பார்க்க வேண்டும்

இதுகுறித்து ஹரீஷிடம் கேட்டோம். அவர் கண்ணீருடன் கூறுகையில், நான் பொண்ணப்பா என்பவரின் தோட்டத்தில் கூலி வேலை செய்து வந்தேன். அவரது பன்றிகள் மற்றும் மாட்டு பண்ணையை பராமரித்து வந்ததுடன், அங்கேயே சிறிய வீட்டில் வசித்து வந்தேன். எனது மனைவி 6 மாதம் கர்ப்பமாக இருந்தார். இந்த நிலையில் கடந்த 8-ந்தேதி பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. அருகில் இருந்த மணல் மேடு சரிந்து வீடுகள் மீது விழுந்தது. இதில் எனது மனைவி, தாய் உள்பட எனது குடும்பத்தில் 3 பேர் சிக்கி உயிரிழந்தனர். நான் எல்லாவற்றையும் இழந்து தவிக்கிறேன்.

எனது மனைவியின் முகத்தை இறுதியாக ஒரு தடவையாவது பார்க்க வேண்டும். அவளது முகத்தை பார்த்தால் எனக்கு போதும். அதனால் இங்கே காத்திருக்கிறேன். இதுவரை அவளது உடல் கிடைக்கவில்லை. மீட்பு பணியினர் கடந்த 13 நாட்களாக மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று தழுதழுத்த குரலில் கூறினார்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!