டி 20 கிரிக்கெட் – வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்திய அணி


இந்தியா மற்றும் வெஸ்ட்இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் இணைந்து அணிக்கு நல்ல தொடக்கத்தை அமைத்தனர். இதில் ஷிகர் தவான் 23(16) ரன்களும், சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்த ரோகித் சர்மா 67(51) ரன்களிலும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்ததாக களமிறங்கிய ரிஷாப் பண்ட் 4(5) ரன்னிலும், கேப்டன் விராட் கோலி 28(23) ரன்களும், மணீஷ் பாண்டே 6(8) ரன்களும் எடுத்து வெளியேறினர். முடிவில் குருணால் பாண்ட்யா 20(13) ரன்களும், ரவீந்திர ஜடேஜா 9(4) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இறுதியில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் சார்பில் அதிகபட்சமாக ஒஷானே தாமஸ் மற்றும் ஷெல்டன் காட்ரெல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், கீமோ பால் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணியின் சார்பில் சுனில் நரைன் மற்றும் இவின் லீவிஸ் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். துவக்கத்திலே தடுமாறிய அந்த ஜோடியில் இவின் லீவிஸ் (0) ரன் ஏதும் எடுக்காமலும், சுனில் நரைன் 4(12) ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்ததாக நிகோலஸ் பூரன் மற்றும் ரோவ்மேன் பவெல் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் அணியின் ரன் ரேட் வேகமாக உயர்ந்தது. இந்த ஜோடியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோவ்மேன் பவெல் 30 பந்துகளில் தனது அரை சதத்தை பதிவு செய்தார். இந்த ஜோடியில் நிகோலஸ் பூரன் 19(34) ரன்களும், அவரைத்தொடர்ந்து ரோவ்மேன் பவெல் 54(34) ரன்களும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

அடுத்ததாக பொல்லார்டு மற்றும் ஹெட்மயர் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இதில் பொல்லார்டு 8(8) ரன்களும், ஹெட்மயர் 6(4) ரன்களும் எடுத்திருந்த நிலையில் மழை காரணமாக ஆட்டம் தடைபட்டது. அப்போது வெஸ்ட் இஸ்டிஸ் அணி 15.3 ஒவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 98 ரன்கள் எடுத்திருந்தது. இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக குர்ணால் பாண்ட்யா 2 விக்கெட்டுகளும், வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில் டக் வோர்த் லீவிஸ் முறையில் 22 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்று தொடரை வென்றுள்ளது. – Source: dailythanthi


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.