தாயின் உயிரை காப்பாற்றுவதற்காக இளம் பெண் செய்த நெகிழ்ச்சி செயல்..!


வங்காளதேசத்தை பூர்வீகமாக கொண்ட 25 வயது இளம்பெண் ஒருவர் பெங்களூருவில் வசித்து வருகிறார். இவருக்கும் பெங்களூருவில் வசிக்கும் ஒரு இளைஞருக்கும் சமீபத்தில் திருமணம் பேசி முடிக்கப்பட்டது. இதற்கிடையே திருமண நிச்சயம் செய்யப்பட்ட பெண்ணின் தாயாருக்கு திடீரென 2 சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டது. அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் உடனடியாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இந்நிலையில் மாற்று சிறுநீரகத்திற்காக பல்வேறு இடங்களில் முயன்று பார்த்தும் இறுதிவரை அவர்களுக்கு சிறுநீரகம் கிடைக்கவில்லை. முடிவில் தாயாருக்காக தனது சிறுநீரகத்தை தானம் செய்ய அந்த இளம்பெண் முன்வந்துள்ளார். இது குறித்து தன்னுடைய வருங்கால கணவரிடம் கலந்தாலோசித்துள்ளார். அவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு கடைசி வரை ஒப்புக்கொள்ளவில்லை. இதை கேட்ட அந்த இளம்பெண் தனக்கு நடக்க இருந்த திருமண நிச்சயதார்த்ததையே ரத்து செய்தார்.

21-ம் தேதி தனது ஒரு சிறுநீரகத்தை தன் தாய்க்கு அளித்தார். பெங்களூருவில் உள்ள பிரபல தனியார் மருத்துவனையில் இந்த சிறுநீரக மாற்று சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது.

இது குறித்து சிகிச்சை செய்த டாக்டர்கள் கூறுகையில், வழக்கமாக திருமணமாகாத பெண்களிடம் இருந்து சிறுநீரகத்தை பெற்றுக்கொள்ள மாட்டோம். ஆனால் அந்த இளம்பெண் தனது தாயின் உயிரை காப்பாற்றுவதில் அவர் உறுதியாக இருந்ததால் இந்த அறுவை சிகிச்சையை நாங்கள் செய்தோம் என்று தெரிவித்தனர்.

தனது தாயின் உயிரை காப்பாற்றுவதற்காக தனக்கு நடக்க இருந்த திருமண நிச்சயதார்த்ததையே ரத்து செய்து சிறுநீரகத்தை தானமாக கொடுத்த அந்த இளம்பெண்ணை பலரும் பாராட்டி வருகின்றனர்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!