ஒட்டகத்தின் சாணத்தில் இருந்து தயாரிக்கப்படும் பொருள் பற்றி தெரியுமா..?


ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒட்டகங்களின் சாணத்தைக் கொண்டு மிக முக்கியமான பொருள் தயாரிக்கப்படுகிறது. அது என்ன என்பதை பார்ப்போம்.

மத்திய கிழக்கு நாடான ஐக்கிய மரபு அமீரகத்தில் பாலைவனங்களில் போக்குவரத்திற்காகவும், பொருட்களை கொண்டு செல்லவும், பால் உற்பத்திக்கும் ஒட்டகங்கள் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன.

பொதுவாக விலங்குகளின் சாணங்கள் ஏதேனும் ஒரு வகையில் மனிதருக்கு உதவுவது வழக்கம்தான். இந்தியாவில் மாடுகளின் சாணம் பல்வேறு முறைகளில் மக்களுக்கு பயன்பட்டுவருகின்றது.

இந்நிலையில் ஒட்டகத்தின் சாணத்தை கொண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் பொருள் ஒன்று தயாரிக்கப்படுகிறது. ராஸ் அல் கைமா எனும் பகுதியில் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒட்டகங்கள் உள்ளன.

இங்கு இருக்கும் விவசாயிகள், ஒட்டகங்களின் சாணங்களை வீடு கட்ட முக்கிய பொருளாக உள்ள சிமெண்ட் தயாரிப்பதற்காக, சிமெண்ட் ஆலைகளில் வழங்குகின்றனர்.

அமீரக அரசின் கழிவு மேலாண்மை அமைப்பும் இந்த திட்டத்திற்காக ஒட்டக சாண சேகரிப்பு மையங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த சாணத்தால் நிலக்கரி மிச்சமாவதாகவும், கால்நடைகளின் கழிவுகள் வீணாக்கப்படாமல் சேகரித்து பயன்படுத்தப்படுவதாகவும் சிமெண்ட் தயாரிப்பு நிர்வாகம் கூறியுள்ளது.

இதன் மூலம் ஒட்டகங்கள் இருக்கும் இடங்கள் சுகாதாரமாக இருப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர். இது குறித்து அமீரக அரசு கூறுகையில், ‘10ல் ஒரு பங்கு ஒட்டக சாணமும், 9 பங்கு நிலக்கரியும் சேர்த்து 1400 டிகிரி செல்சியஸ் அளவுக்கு சூடாக்கப்படும்போது சிமெண்ட் கலவை கிடைக்கிறது.

தினமும் 50 டன் சாணம் ஆலைக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதனால் 2021ம் ஆண்டுக்குள் 75% ஒட்டக கழிவுகள் குப்பைக்கு செல்லாமல் அத்தியாவசிய தேவைக்குப் பயன்படும்’ என கூறியுள்ளது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!