நண்பனின் கடனை அடைப்பதற்காக மராட்டியம் வந்த கென்ய நாட்டு எம்.பி. – நெகிழ்ச்சி சம்பவம்..!


30 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய கடனை மராட்டியம் வந்து கென்ய நாட்டு எம்.பி. திருப்பி செலுத்திய நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

கென்ய நாட்டு எம்.பி.

கென்யா நாட்டில் எம்.பி.யாக பதவி வகிப்பவர் ரிச்சர்ட் டோங்கி. இவர் 1985-89-ம் ஆண்டில் மராட்டிய மாநிலம் அவுரங்காபாத்தில் உள்ள கல்லூரியில் மேலாண்மை படித்தார். அப்போது அவருடன் படித்தவர் அவுரங்காபாத்தை சேர்ந்த காசிநாத் காவ்லி. படிப்பு முடிந்த பிறகு ரிச்சர்ட் டோங்கி தனது தாய் நாடான கென்யாவுக்கு பறந்து விட்டார். அங்கு அவர் அரசியலில் ஈடுபட்டு எம்.பி.யாக உயர்ந்தார். காசிநாத் காவ்லி அவுரங்காபாத்தில் உள்ள வாகன்கடே நகரில் மளிகை கடை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை மளிகை கடைக்காரர் காசிநாத் காவ்லிக்கு கென்ய நாட்டு எம்.பி. இன்ப அதிர்ச்சி கொடுத்தார். 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது வீடு தேடி வந்த ரிச்சர்ட் டோங்கியை காசிநாத் காவ்லி கண்ணீர் ததும்ப வரவேற்றார். அப்போது ஓட்டலுக்கு சென்று சாப்பிடலாம் என்று மளிகை கடைக்காரர் அழைத்தபோது, இல்லை, இல்லை… உங்கள் வீட்டில் தான் சாப்பிடுவேன் என்று கென்ய நாட்டு எம்.பி. அன்பாக அடம் பிடித்தார். இதனால் வீட்டிலேயே சமையல் செய்த உணவை அவருக்கும், உடன் வந்த அவரது மனைவிக்கும் மளிகை கடைக்காரரின் குடும்பத்தினர் பரிமாறி விருந்தளித்தனர்.

திருப்பி செலுத்தினார்

அப்போது திடீரென 200 ரூபாயை காசிநாத் காவ்லியிடம் ரிச்சர்ட் டோங்கி கொடுத்தார். அவுரங்காபாத்தில் உடன் படித்தபோது, அந்த தொகையை கடன் வாங்கியதை எடுத்துக்கூறி தனது நண்பரிடம் வழங்கினார்.

இதுகுறித்து ரிச்சர்ட் டோங்கி நிருபர்களிடம் கூறுகையில், “அவுரங்காபாத்தில் படித்தபோது எனக்கு வசதி கிடையாது. அப்போது எனது நண்பர் காசிநாத் காவ்லியிடம் வாங்கிய கடன் தொகை ரூ.200-யை திருப்பி செலுத்த முடியாமல் சொந்த நாட்டுக்கு சென்று விட்டேன். ஒரு நாள் அது நினைவுக்கு வந்தது. இதனால் இந்தியா வந்து கடனை திருப்பி செலுத்தி விட்டேன்” என்றார்.

பின்னர் அவர் தனது நண்பர் காசிநாத் காவ்லியை கென்ய நாட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்து விட்டு தாயகம் பறந்தார். அவரை ஆனந்த கண்ணீருடன் காசிநாத் காவ்லி வழியனுப்பி வைத்தார்.

கோடி கோடியாய் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாமல் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடுபவர்கள் ஒருபுறம் இருக்க, வெளிநாட்டு எம்.பி. ஒருவர் 30 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய வெறும் 200 ரூபாயை நாடுகடந்து வந்து அடைத்து சென்றது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!