என்னை மடக்கி பிடிப்பதற்கு நீ யார்? நடுரோட்டில் போலீசாருடன் வாக்குவாதம்..!


சென்னை முழுவதும் இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்கள் மீது போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். சென்னை அமைந்தகரை அண்ணா வளைவு அருகே பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான அமைந்தகரை போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக ஹெல்மெட் அணியாமல் மொபட்டில் வந்த நபரை போக்குவரத்து இன்ஸ்பெக்டர் குமார் மடக்கிப்பிடித்தார். அவருக்கு பின்னால் பெண் ஒருவர் அமர்ந்து இருந்தார். அவரும் ஹெல்மெட் அணியவில்லை.

அவரிடம் ஹெல்மெட் அணியாமல் செல்வது குறித்து கேட்ட இன்ஸ்பெக்டர் குமார், இதற்காக வழக்குப்பதிவு செய்யப்போவதாக தெரிவித்தார்.

ஆனால் அந்த நபர், மொபட்டில் இருந்து கீழே இறங்காமல் நடுரோட்டில் நின்று கொண்டே, “என்னை மடக்கி பிடிப்பதற்கு நீ யார்?. எதற்காக பொதுமக்களை தொந்தரவு செய்கிறீர்கள். ஹெல்மெட் போடமுடியாது” என இன்ஸ்பெக்டருடன் கடும் வாக்குவாதம் செய்தார்.

சிறிது நேரத்தில் போக்குவரத்து சிக்னலில் பச்சை விளக்கு விழுந்ததால் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து வந்தன. இதனால் அந்த நபரை நடுரோட்டில் இருந்து சாலையோரமாக வரும்படி போக்குவரத்து போலீசார் கூறினர். ஆனால் அந்த நபர், அந்த இடத்தை விட்டு நகர மறுத்ததுடன், போலீசாருடன் தொடர்ந்து வாக்குவாதம் செய்தார்.

சிறிது நேரத்தில் மொபட்டில் அவருக்கு பின்னால் அமர்ந்து இருந்த பெண் கீழே இறங்கி சென்றுவிட்டார். அதன்பிறகு அந்த நபர், போக்குவரத்து இன்ஸ்பெக்டரை ஒருமையில் பேசத் தொடங்கினார். நடுரோட்டில் அவர் நின்றதால், அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அவரை போலீசார், சாலையோரமாக வரும்படி தொடர்ந்து வலியுறுத்தினர். உடனே அந்த நபர், மொபட்டை நடுரோட்டில் நிறுத்திவிட்டு, அதன் சாவியை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார்.

நடுரோட்டில் நிறுத்தி இருந்த மொபட்டை போலீசார் மீட்டு சாலையோரம் நிறுத்தினர். மொபட்டின் பதிவு எண்ணை வைத்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த நபர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என போக்குவரத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே போலீசாருடன் அந்த நபர் வாக்குவாதம் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!