நியூசிலாந்தை புரட்டியெடுத்து அரைஇறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து..!


10 அணிகள் பங்கேற்றுள்ள 12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் செஸ்டர்-லீ-ஸ்டிரிட்டில் நேற்று அரங்கேறிய 41-வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இங்கிலாந்து அணியில் மாற்றம் ஏதும் இல்லை. நியூசிலாந்து அணியில் லேசான காயத்தால் அவதிப்படும் லோக்கி பெர்குசன் மற்றும் சோதி ஆகியோர் நீக்கப்பட்டு மேட் ஹென்றி, டிம் சவுதி சேர்க்கப்பட்டனர்.

‘டாஸ்’ ஜெயித்த இங்கிலாந்து கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடியுடன் முதலில் பேட் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஜானி பேர்ஸ்டோவும், ஜாசன் ராயும் அடியெடுத்து வைத்தனர். முதல் பந்தில் ‘பைஸ்’ வகையில் கிடைத்த 4 ரன்னுடன் இன்னிங்சை ஆரம்பித்த இவர்கள் நியூசிலாந்து பந்து வீச்சை அடித்து ஆடினார்கள். டிம் சவுதியின் ஓவரில் ‘ஹாட்ரிக்’ பவுண்டரி விரட்டியடித்து பேர்ஸ்டோ உள்ளூர் ரசிகர்களை குஷிப்படுத்தினார். 14.4 ஓவர்களில் இங்கிலாந்து 100 ரன்களை தொட்டது. இந்த உலக கோப்பையில் பேர்ஸ்டோ-ஜாசன் ராய் இணை முதல் விக்கெட்டுக்கு செஞ்சுரி பார்ட்னர்ஷிப் அமைத்து தருவது இது 3-வது முறையாகும்.

அணியின் ஸ்கோர் 123 ரன்களை (18.4 ஓவர்) எட்டிய போது ஜாசன் ராய் (60 ரன், 61 பந்து, 8 பவுண்டரி) கேட்ச் ஆனார். அடுத்து ஜோ ரூட் வந்தார். மறுமுனையில் அபாரமாக ஆடிய பேர்ஸ்டோ தனது 9-வது சதத்தை நிறைவு செய்தார். முந்தைய ஆட்டத்தில் இந்தியாவுக்கு எதிராகவும் அவர் சதம் கண்டிருந்தார். இதன் மூலம் உலக கோப்பை கிரிக்கெட்டில் அடுத்தடுத்த ஆட்டங்களில் சதம் விளாசிய முதல் இங்கிலாந்து வீரர் என்ற சிறப்பை பேர்ஸ்டோ பெற்றார்.

30 ஓவர்களில் அந்த அணி ஒரு விக்கெட்டுக்கு 194 ரன்களுடன் மிக வலுவான நிலையில் இருந்ததை பார்த்த போது, 350 ரன்களை தாண்டக்கூடும் என்று மதிப்பிடப்பட்டது.

ஆனால் இந்த ஜோடி பிரிந்ததும் ஸ்கோர் தடாலடியாக குறைந்து போனது. ஜோ ரூட் 24 ரன்னிலும், பேர்ஸ்டோ 106 ரன்களிலும் (99 பந்து, 15 பவுண்டரி, ஒரு சிக்சர்) வெளியேறினர். அடுத்து வந்த வீரர்களில் கேப்டன் மோர்கன் (42 ரன், 40 பந்து, 5 பவுண்டரி) தவிர மற்றவர்கள் அவசரகதியில் ஆடி விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால் 300 ரன்களை தாண்டுவதற்கே அந்த அணி பெரும்பாடு பட வேண்டியதாகி விட்டது.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 305 ரன்கள் குவித்தது. நடப்பு தொடரில் அந்த அணி 300 ரன்களுக்கு மேல் எடுப்பது இது 6-வது நிகழ்வாகும்.

அடுத்து கடின இலக்கை நோக்கி களம் இறங்கிய நியூசிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் ஹென்றி நிகோல்ஸ் (0), மார்ட்டின் கப்தில் (8 ரன்) இருவரும் ஒற்றை இலக்கத்துடன் நடையை கட்டினர்.

இதன் பின்னர் கேப்டன் கேன் வில்லியம்சனும், முன்னாள் கேப்டன் ராஸ் டெய்லரும் இணைந்து அணியை சரிவில் இருந்து கொஞ்சம் மீட்டனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக வில்லியம்சன் (27 ரன்), டெய்லர் (28 ரன்) அடுத்தடுத்த ஓவர்களில் ரன்-அவுட் ஆக, இங்கிலாந்தின் கை ஓங்கியது. பின்வரிசையில் டாம் லாதம் (57 ரன்) தவிர மற்றவர்கள் சொற்ப ரன்னில் ஆட்டம் இழந்தனர். நியூசிலாந்து அணி 45 ஓவர்களில் 186 ரன்களுக்கு சுருண்டது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 119 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

9-வது ஆட்டத்தில் ஆடி 6-வது வெற்றியை ருசித்த இங்கிலாந்து அணி அரைஇறுதி சுற்றுக்குள் கால்பதித்தது. அந்த அணி உலக கோப்பையில் அரைஇறுதியை எட்டுவது 1992-ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும்.

நியூசிலாந்துக்கு இது 3-வது தோல்வியாகும். இந்த மூன்று தோல்வியையும் தொடர்ச்சியாக சந்தித்து இருக்கிறது. நியூசிலாந்து அணிக்கு அடுத்த சுற்று வாய்ப்பு முடிந்துவிடவில்லை. பாகிஸ்தான்-வங்காளதேச இடையிலான ஆட்டத்தின் முடிவை பொறுத்து நியூசிலாந்து வாய்ப்பு முடிவாகும்.

36 ஆண்டுக்கு பிறகு…

உலக கோப்பை கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணி நியூசிலாந்தை தோற்கடிப்பது கடந்த 36 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும். கடைசியாக 1983-ம் ஆண்டு உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து வென்று இருந்தது.

500 ரன்களை கடந்தார், ஜோ ரூட்

இங்கிலாந்து நட்சத்திர பேட்ஸ்மேன் ஜோ ரூட் இந்த உலக கோப்பை கிரிக்கெட்டில் நேற்று 500 ரன்களை எட்டினார். அவரையும் சேர்த்து இந்த உலக கோப்பையில் 5 வீரர்கள் 500 ரன்களை கடந்துள்ளனர். முதல் 4 இடங்களில் இந்தியாவின் ரோகித் சர்மா (544 ரன்), வங்காளதேசத்தின் ஷகிப் அல்-ஹசன் (542 ரன்), ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் (516 ரன்), ஆரோன் பிஞ்ச் (504 ரன்) உள்ளனர். உலக கோப்பை தொடர் ஒன்றில் 5 வீரர்கள் 500 ரன்களை கடந்திருப்பது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்பு 2007-ம் ஆண்டு உலக கோப்பையில் அதிகபட்சமாக 3 வீரர்கள் 500 ரன்களுக்கு மேல் எடுத்திருந்தனர்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!