மும்பையில் கல்லூரி மாணவியை மானபங்கம் செய்த ஆட்டோ டிரைவர் குஜராத்தில் சிக்கினார்..!


மும்பை அந்தேரியை சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி சம்பவத்தன்று சக்காலாவில் இருந்து சாந்தாகுருசில் உள்ள கல்லூரிக்கு ஆட்டோவில் சென்றார். இதில் மாணவி ஆட்டோவில் இருந்து இறங்கி பணம் கொடுத்த போது டிரைவர் மாணவியை தொட்டு மானபங்கம் செய்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி இதுகுறித்து பெற்றோரிடம் கூறினார். அவர்கள் ஆட்டோ டிரைவர் மீது அந்தேரி போலீசில் புகார் அளித்தனர். மேலும் மாணவி செல்போனில் போட்டோ எடுத்து வைத்து இருந்த ஆட்டோவின் பதிவெண் விவரங்களையும் போலீசாரிடம் கொடுத்தனர்.

இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் மாணவியை மானபங்கம் செய்தது பாந்திராவில் வசித்து வரும் ஆட்டோ டிரைவர் குல்பாம் கான் (32) என்பது தெரியவந்தது. இதன் பின்னர் போலீசார் பாந்திராவுக்கு சென்று அவரை பிடிக்க முயன்றனர். அப்போது அவர் சொந்த ஊரான உத்தரபிரதேசத்துக்கு தப்பி சென்றது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அங்கு விரைந்தனர். எனினும் போலீசார் அங்கு வருவதை உறவினர் கொடுத்த தகவல் மூலம் தெரிந்து கொண்டு ஆட்டோ டிரைவர் உத்தரபிரதேசத்தில் இருந்து குஜராத் மாநிலம் வாபிக்கு தப்பி சென்றார். எனினும் போலீசார் செல்போன் சிக்னல் மூலம் ஆட்டோ டிரைவர் வாபியில் இருப்பதை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து போலீசார் அங்கு சென்று மாணவியை மானபங்கம் செய்த ஆட்டோ டிரைவர் குல்பாம் கானை கைது செய்தனர். மேலும் மும்பை அழைத்து வந்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!