வீட்டு ஏ.சி. எந்திரத்துக்குள் 3 மாத காலமாக விருந்தாளியாக தங்கியிருந்த பாம்பு..!


புதுவையில் வீட்டு ஏ.சி. எந்திரத்துக்குள் 3 மாதமாக குடியிருந்த பாம்பை வனத்துறையினர் லாவகமாக மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.

புதுவை தேங்காய்திட்டு சாய் ஜீவா சரோஜினி நகரை சேர்ந்தவர் ஏழுமலை.

புதுவை அரசின் சமூக நலத்துறையில் பணியாற்றும் ஏழுமலை தனது வீட்டின் படுக்கை அறையில் உள்ள ஏ.சி.யை போட்டுள்ளார். அப்போது ஏ.சி. எந்திரத்தில் இருந்து வழக்கத்துக்கு மாறாக சத்தம் வந்துள்ளது.

இதனால் ஏ.சி. பழுதாகி இருக்கலாம் என கருதி நிறுத்தி விட்டார். அதோடு ஏ.சி.யை பழுது நீக்க மெக்கானிக்கை அழைத்தார். நேற்று காலை ஏழுமலை வீட்டுக்கு வந்த மெக்கானிக் ஏ.சி.யை கழற்றி பார்த்தார்.

அப்போது எந்திரத்துக்குள் 2 பாம்பு தோல்கள் இருந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த மெக்கானிக் ஏ.சி.யின் கீழ் பகுதியில் டார்ச் லைட் அடித்து பார்த்துள்ளார்.

இதில் ஏ.சி.யின் மறைவான பகுதியில் பாம்பு ஒளிந்திருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து மெக்கானிக் வீட்டு உரிமையாளர் ஏழுமலையிடம் தகவல் தெரிவித்தார்.


இதுகுறித்து வனத்துறையில் பாம்பு பிடிக்கும் நபர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறை ஊழியர்கள் 2 பேர் ஏ.சி. எந்திரத்துக்குள் மறைந்திருந்த பாம்பை மீட்க ஒரு மணி நேரம் போராடினர்.

போராட்டத்தின் இறுதியில் ஏ.சி. எந்திரத்துக்குள் பதுங்கி இருந்த 2 அடி நீளமுள்ள சாரை பாம்பு பிடிபட்டது. இதனை லாவகமாக மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.

ஏ.சி.யின் வெளிப்புற அவுட்டோர் யூனிட்டில் இருந்து வரும் பைப் லைனை சரியாக அடைக்காமல் இருந்துள்ளது. இதனால் அந்த வழியாக பாம்பு ஏ.சி. எந்திரத்துக்குள் புகுந்துள்ளது.

எந்திரத்தின் துளைக்கு அருகிலேயே மரம் உள்ளது. இது, பாம்புக்கு வசதியாக அமைந்து விட்டது. இதனால் பாம்பு வெளியில் சென்று இறையெடுத்து பின்னர் மீண்டும் எந்திரத்துக்குள் வந்து தங்கி உள்ளது.

குறைந்தது 3 மாத காலமாக ஏழுமலை வீட்டில் விருந்தாளியாக பாம்பு தங்கி இருக்கலாம் என தெரியவந்துள்ளது.

ஏனெனில், ஏ.சி. எந்திரத்துக்குள் 2 முறை பாம்பு தோல் உரிந்துள்ளது. இதன் மூலம் குறைந்தபட்சம் 3 மாத காலம் பாம்பு ஏ.சி. எந்திரத்துக்குள் இருந்திருக்கலாம் என வனத்துறையினர் உறுதி செய்கின்றனர்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!