பௌத்த பிக்கு உண்ணாவிரதத்தால் பதற்றம்.. முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த 9 அமைச்சர்கள் ராஜினாமா..!


இலங்கையில் ஏப்ரல் மாதம் ஈஸ்டர் தினத்தன்று தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 350க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இது தொடர்பாக இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் மீது சந்தேகம் எழுந்ததால் விரக்தி அடைந்த அவர்கள் 9 பேரும் ராஜினாமா செய்தனர். இரண்டு ஆளுநர்களும் திடீரென ராஜினாமா செய்துள்ளனர்.

இலங்கையில் ஏப்ரல் மாதம் ஈஸ்டர் தினத்தன்று தேவலாயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளை குறி வைத்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 350க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இந்த தீவிரவாத தாக்குதலுக்கு பின்னர், அங்குள்ள மக்களிடையே இஸ்லாமியர்களுககு எதிரான மனநிலை அதிகரித்தது இதனால் இஸ்லாமியர்களின் வீடுகள், சொத்துக்கள் பல இடங்களில் தீக்கிரையாக்கப்பட்டன. இதையடுத்து ஐ.எஸ். இயக்கத்திடம் பயிற்சி பெற்ற பலரும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.

இப்படி கைது செய்யப்பட்டவர்களுடன் முஸ்லிம் ஆளுநர்கள் ஹிஸ்புல்லா, அசாத் ஸாலி மற்றும் அமைச்சர் ரிசாத் பதியுதீன் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் இவர்கள் அனைவருமே தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக நிராகரித்தனர்.

இந்நிலையில் இலங்கையில் பவுத்த பிக்குவும் எம்.பி.யுமான அத்துரலிய ரத்ன தேரர், ஈஸ்டர் குண்டுவெடிப்பில் தொடர்புடையதாக முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் ஆளுநர்கள் சிலரை குற்றம்சாட்டி கண்டியில் உண்ணாவிரதம் இருந்தார். இவருக்கு ஆதரவாக நாடு முழுவதும் பவுத்த பிக்குகள் போராட்டத்தில் குதிப்போம் என பவுத்த அடிப்படைவாத அமைப்பான பொதுபல சேனா அறிவித்தது.

திங்கள்கிழமை காலை அத்துரலிய ரத்ன தேரர் உண்ணாவிரதம் நடத்திய இடத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பவுத்தர்கள் கூடி முஸ்லிம் அமைச்சர்களுக்கு எதிராக போர்கொடி உயர்த்தி கோஷமிட்டனர். இதனால் மீண்டும் பெரிய போராட்டம் வெடிக்கும் அபாயம் இருந்தது.

இதையடுத்து ஆளுநர்கள் ஹிஸ்புல்லா மற்றும் அசாத் ஸாலி இருவரும் தங்களது ராஜினாமா கடிதங்களை எழுத்துப்பூர்வமாக இன்று அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைத்தார்கள். இதேபோல் 9 முஸ்லிம் அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர். இதையடுத்து பவுத்த பிக்கு அத்துரலிய ரத்ன தேரர் தனது உண்ணாவிரதத்தை கைவிட்டார்.

இதற்கிடையில் முஸ்லீம் அரசியல் கட்சி தலைவர்கள் , தங்கள் சமூகத்தை பாதுகாக்க அரசு தவறிவிட்டதாக குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ராஜினாமா செய்த முஸ்லிம் அமைச்சர்கள் கூறுகையில், குண்டுவெடிப்பில் விவகாரத்தில் இலங்கை அரசின் முழு விசாரணைக்கு நாங்கள் தயாராக உள்ளோம். அதற்காக ராஜினாமா செய்துள்ளோம் என்றார்கள். இலங்கையில் மொத்தம் உள்ள 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 19பேர் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.இதில் 9 பேர் கேபினட் மற்றும இணை, துணை அமைச்சர் பொறுப்புகளில் வகித்து வந்தனர்.-Source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!