பா.ஜனதா வென்ற நாளில் குழந்தைக்கு மோடியின் பெயரை சூட்டிய முஸ்லிம் பெண்: திடீரென பெயரை மாற்றினார்

நாடாளுமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்ற நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார். இந்த தேர்தல் முடிவுகள் வெளியான கடந்த 23-ந்தேதி உத்தரபிரதேசத்தின் கொண்டா மாவட்டத்தை சேர்ந்த முஸ்தாக் அகமது-மைனாஸ் பேகம் தம்பதிக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. இந்த குழந்தைக்கு ‘நரேந்திர தாமோதர் தாஸ் மோடி’ என பிரதமரின் பெயரையே சூட்டினார். இது சமூக வலைதளங்களில் வைரலாகியது. பல்வேறு தரப்பினர் பாராட்டுகளை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், இப்போது அந்த பெயரை முகமது அல்தாப் ஆலம் மோடி என்று மாற்றிவிட்டார். இது குறித்து மைனாஸ் பேகம் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

என் குழந்தைக்கு மோடியின் பெயரை வைத்த பின் என்னுடைய உறவினர்கள் தரப்பில் இருந்து பயங்கர எதிர்ப்புகள் எழுந்தன. என் குழந்தையின் பெயர்சூட்டு விழாவுக்கு உறவினர்களை அழைத்தபோதிலும் யாரும் கலந்து கொள்ள முன்வரவில்லை.

இனிமேல் தேவையில்லாத சர்ச்சைகளை வளர்க்க நான் விரும்பவில்லை, பிரச்சினைகளையும் உருவாக்கவும் நான் தயாராகயில்லை என்பதால், என் குழந்தையின் பெயரை மாற்றிவிட்டேன். குழந்தையின் பெயரின் முடிவில் மட்டும் மோடி என்று இருக்கட்டும். நரேந்திர மோடி எனும் பெயரை மாற்றி முகமது அல்தாப் ஆலம் மோடி என்று மாற்றி விட்டேன் எனக்கூறினார்.

மோடியின் பெயரை அந்த பெண் மாற்றினாலும் குழந்தையின் பிறந்த தேதியை பொய்யாக பதிவு செய்துள்ளார் என்ற சர்ச்சை தற்போது எழுந்துள்ளது. உண்மையில் அந்த குழந்தை பிறந்த தேதி மே 12-ம் தேதி, உள்ளூர் மருத்துவமனையில் அந்த பெண்ணுக்கு பிரசவமாகியுள்ளது. என அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை மருத்துவர்களும் உறுதி செய்துள்ளனர்.

23-ம் தேதி தேர்தல் முடிவு வெளியான அன்று குழந்தை பிறந்தது போன்று வெளியே கூறினால் புகழ்பெறலாம் என்ற நோக்கில் அந்த பெண் பொய் கூறியுள்ளார் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.- Source: dailythanthi


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.