உலக கோப்பை போட்டியில் விளையாட தினேஷ் கார்த்திக்கை தேர்வு செய்தது ஏன்? விராட் கோலி


உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் இடம் பெற்ற விவகாரம் தொடர்பாக எந்த கருத்தும் கூறாமல் இருந்த கேப்டன் விராட் கோலி தனது மவுனத்தை கலைத்து உள்ளார்.

12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 30-ந்தேதி முதல் ஜூலை 14-ந்தேதி வரையில் நடக்கிறது.

இந்த போட்டிக்காக 15 பேர் கொண்ட இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் விக்கெட் கீப்பர் டோனி தொடர்பாக கடும் விமர்சனம் எழுந்தது. அதிரடி ஆட்டக்காரர் ரிசப் பந்துக்கு பதிலாக தினேஷ் கார்த்திக்கை தேர்வு செய்தது தவறு என்று முன்னாள் வீரர்கள் சிலர் கருத்து தெரிவித்து இருந்தனர்.

அனுபவத்தின் அடிப்படையிலேயே தினேஷ் கார்த்திக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வாய்ப்பு வழங்கப்பட்டது என்று தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் விளக்கம் அளித்து இருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக எந்த கருத்தும் கூறாமல் இருந்த கேப்டன் விராட் கோலி தனது மவுனத்தை கலைத்து உள்ளார். உலக கோப்பை போட்டியில் ரி‌ஷப் பந்துக்கு பதிலாக தினேஷ் கார்த்திக்கை தேர்வு செய்தது ஏன்? என்பதற்கு அவர் விளக்கம் அளித்து உள்ளார்.


தினேஷ்கார்த்திக் உலக கோப்பைக்கான அணியில் தேர்வு செய்ததற்கு அவரது அனுபவமே முக்கிய காரணம். நெருக்கடியான நேரத்திலும், இக்கட்டான சூழ்நிலையிலும் அமைதியாக இருந்து நிதானமாக ‘பேட்டிங்’ செய்யக்கூடிய திறமை கொண்டவர். இந்த ஒரு வி‌ஷயத்தை கிரிக்கெட் வாரியத்தில் உள்ள அனைவரும் தேர்வு குழுவினரும் ஒப்புக் கொண்டனர். இதனால் தினேஷ் கார்த்திக்குக்கு இயல்பாகவே வாய்ப்பு வழங்கப்பட்டது.

தினேஷ் கார்த்திக்கு அனுபவம் இருக்கிறது. டோனிக்கு ஒருவேளை காயம் ஏற்பட்டு அவர் ஆட முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் தினேஷ் கார்த்திக்கால் கீப்பிங் பணியை கவனிக்க முடியும்.

மேலும் ஆட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்யக்கூடிய சிறப்பான திறமையை பெற்றவர். இந்த அடிப்படையில் தான் அவருக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

33 வயதான சென்னையை சேர்ந்த தினேஷ் கார்த்திக் டோனி வருவதற்கு ஒரு ஆண்டு முன்பே சர்வதேச போட்டியில் அறிமுகம் ஆனார்.

2004-ல் அறிமுகமான அவர் 2007 உலககோப்பை அணியில் இடம் பெற்றார். ஆனால் ஒரு ஆட்டத்தில் கூட வாய்ப்பு வழங்கப்படவில்லை. தற்போது 2-வது முறையாக உலககோப்பை அணியில் இடம் பெற்றுள்ளார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!