கொடுத்த கடனை திருப்பி கேட்ட பெண்ணை தீர்த்து கட்டிய தம்பதி… பின்ணனியில் பகீர்..!


கொடுத்த கடனை திருப்பி கேட்டதால் அவர்கள், அந்த பெண்ணை தீர்த்து கட்டியது அம்பலமாகி உள்ளது.

தட்சிண கன்னடா மாவட்டம் அட்டாவர் பகுதியில் வசித்து வந்தவர் ஸ்ரீமதி செட்டி. இவர் கடந்த 11-ந் தேதி அதே பகுதியைச் சேர்ந்த ஜோனாஸ் சாம்சன்(வயது 36) என்பவருடைய வீட்டில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். மேலும் அந்த வீட்டில் இருந்த ஜோனாஸ் சாம்சனும், அவருடைய மனைவி விக்டோரியா மாத்தியாஸ்(46) என்பவரும் தலைமறைவாகி இருந்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக பாண்டேஸ்வர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த கொலை வழக்கில் போலீசாருக்கு எந்தவொரு துப்பும் கிடைக்கவில்லை. இதையடுத்து இன்ஸ்பெக்டர்கள் ஜெகதீஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.

அதாவது, ஸ்ரீமதி செட்டியிடம் ஜோனாஸ் சாம்சன் பல லட்சம் ரூபாய் கடன் வாங்கி உள்ளார். அந்த பணத்தை அவரால் திருப்பி தரமுடியவில்லை. ஆனால் அந்த கடனில் குறிப்பிட்ட தொகையை மட்டும் அவர் திருப்பி செலுத்தி இருந்தார். மீதி கடன் தொகையை கேட்டு ஜோனாஸ் சாம்சனுக்கு, ஸ்ரீமதி செட்டி அடிக்கடி தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது.

இதனால் ஸ்ரீமதி செட்டியை தீர்த்துக்கட்ட ஜோனாஸ் சாம்சனும், அவருடைய மனைவி விக்டோரியா மாத்தியாசும் சேர்ந்து திட்டமிட்டனர். அதன்படி அவர்கள் கடந்த 11-ந் தேதி ஸ்ரீமதி செட்டியை தங்களுடைய வீட்டிற்கு வரவழைத்தனர். அதன்பேரில் ஸ்ரீமதி செட்டியும் தனக்கு மீதிப்பணத்தை கொடுக்கப்போகிறார்கள் என்று நினைத்து அங்கு சென்றுள்ளார்.

அப்போது அங்கு வைத்து பயங்கர ஆயுதங்களால் தாக்கி ஸ்ரீமதி செட்டியை, ஜோனாஸ் சாம்சனும், அவருடைய மனைவி விக்டோரியா மாத்தியாசும் சேர்ந்து படுகொலை செய்துள்ளனர். பின்னர் அவர்கள் ஓடிவிட்டது போலீசாருக்கு தெரியவந்தது. மேலும் அவர்கள் 2 பேரும் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்ததும் போலீசாருக்கு தெரிய வந்தது.

இந்த நிலையில் ஜோனாஸ் சாம்சன் தனது மனைவியுடன் உறவினர் ஒருவர் வீட்டில் பதுங்கி இருப்பது தனிப்படை போலீசாருக்கு தெரியவந்தது.

அதன்பேரில் தனிப்படை போலீசார் அங்கு சென்று ஜோனாஸ் சாம்சனையும், அவருடைய மனைவி விக்டோரியா மாத்தியாசையும் பிடித்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஸ்ரீமதி செட்டியின் ஸ்கூட்டரையும், ஒரு தங்கச்சங்கிலியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!