அம்மா சிகிச்சைக்காக மருத்துவமனை சென்றதும் வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு நிகழ்ந்த துயரம்…!


வேலூர் மாவட்டம் வாணியம்பாடி சலாமான்பாத் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் மகன் அருண்விஜய் என்கிற முகமது இஸ்மாயில் (வயது 26). இவர், வாணியம்பாடியில் உள்ள தோல்தொழிற்சாலை ஒன்றில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

அதேபகுதியில், 29 வயது மதிக்கத்தக்க ஒரு பெண், கருத்து வேறுபாடால் தன்னுடைய கணவரை விட்டு பிரிந்து தனிமையில் வாழ்ந்து வந்தார். அந்தப் பெண்ணுக்கு 11 வயதில் ஒரு மகளும், 8 வயதில் ஒரு மகனும் இருந்தனர்.

அந்தப் பெண்ணை, முகமதுஇஸ்மாயில் திருமணம் செய்து கொண்டார். இந்தநிலையில் 2014–ம் ஆண்டு மே மாதம் 12–ந்தேதி அந்தப் பெண்ணுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு அப்பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார்.

அப்போது அந்தப் பெண்ணின் மகள் வீட்டில் தனியாக இருந்தாள். அந்த 11 வயது சிறுமியின் வாயில் துணியை வைத்து அடைத்து, அவளை முகமதுஇஸ்மாயில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

மேலும் இதுகுறித்து யாரிடமும் சொன்னால், உன்னை கொலை செய்து விடுவேன், என மிரட்டி உள்ளார். தனக்கு நேர்ந்த கொடூர சம்பவத்தை சிறுமி அழுதுகொண்டே தன்னுடைய தாயிடம் தெரிவித்துள்ளாள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

அதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண், இதுபற்றி வாணியம்பாடி மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதுதொடர்பாக முகமது இஸ்மாயிலை கைது செய்து, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை வேலூர் மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது.

கடந்த 3 மாதங்களுக்கு முன்பாக போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்த முகமதுஇஸ்மாயிலை அழைத்து வந்தனர். அப்போது அவர் கழிவறைக்கு சென்று வருவதாக கூறி, கோர்ட்டில் இருந்து தப்பி ஓடி விட்டார்.

கைதி தப்பி ஓடியது தொடர்பாக, பாதுகாப்பு பணியில் இருந்த 2 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். தப்பி ஓடிய 10 நாட்களுக்குள் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, வாணியம்பாடியில் பதுங்கியிருந்த முகமதுஇஸ்மாயிலை மீண்டும் கைது செய்து, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மதுசூதனன், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டதால் முகமதுஇஸ்மாயிலுக்கு 342, 506 (2), 323 ஆகிய பிரிவுகளின் கீழ் 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 6/5 (என்) பிரிவின் கீழ் ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

மேலும் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும், அபராதத் தொகையை செலுத்த தவறினால் 3 மாதம் கூடுதலாக சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு சார்பில் வழக்கறிஞர்கள் பிரேமாபாரதி, லட்சுமிப்ரியா ஆகியோர் வாதாடினார்கள். – Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!