பயங்கரவாதிகளின் தொடர் குண்டுவெடிப்பில் பெற்றோரை இழந்து தவிக்கும் 200 குழந்தைகள்.!


இலங்கை தொடர் குண்டுவெடிப்பில் 200 குழந்தைகள், தங்கள் குடும்ப உறுப்பினர்களை இழந்துள்ளதாக செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் கடந்த மாதம் 21-ந் தேதி ஈஸ்டர் பண்டிகையின்போது தேவாலயங்கள், ஓட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடந்தன. இதில் 250-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 500-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் பரிதாப நிலை குறித்து கொழும்பை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இலங்கை செஞ்சிலுவை சங்கம் அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தொடர் குண்டுவெடிப்பால் 200 குழந்தைகள், தங்கள் குடும்ப உறுப்பினர்களை இழந்துள்ளனர். சில குடும்பங்கள், தங்கள் வருவாய் ஆதாரத்தை இழந்துவிட்டன. அவர்களுக்கு போதிய சேமிப்பும் இல்லாததால், அன்றாட வாழ்க்கை நடத்தவே சிரமப்படுகின்றனர்.


குண்டுவெடிப்பில் காயம் அடைந்த பலர் வேலைக்கு செல்ல முடியாத நிலையில் உள்ளனர். சிலர் வேலை செய்யும் திறனை இழந்துவிட்டனர். குடும்ப உறுப்பினர்கள் காயம் அடைந்ததால், 75 குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

குண்டுவெடிப்பில் உயிர் பிழைத்தவர்கள், நேரில் பார்த்தவர்கள், குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்கள் ஆகியோருக்கு முதலில் ‘உளவியல் முதலுதவி’ தேவைப்படுகிறது. இந்த வேதனையுடன் அவர்கள் புதிய சவால்களை சந்திக்க தயங்குவார்கள். ஆகவே, உளவியல் முதலுதவி அளிப்பதன் மூலம், அவர்களின் ஆரம்பகட்ட மன உளைச்சலை தணிக்க முடியும் என்று செஞ்சிலுவை சங்கம் கருதுகிறது.

மீண்டும் தாக்குதல் நடக்கக்கூடும் என்ற அச்சுறுத்தலும், பாதுகாப்பு சோதனையும், அவசரநிலை பிரகடனமும் மக்களிடையே பதற்றத்தையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!