அட்சய திருதியை அன்று கட்டாயம் ஏன் குபேர லட்சுமி பூஜை செய்ய வேண்டும்..?


அட்சய திருதியை நாளில், குபேர லட்சுமி பூஜை செய்வது சிறப்புக்குரியது. அதோடு பொன், பொருள் வாங்குவது, அலுவலக கணக்குகள், தொழில் சார்ந்த புத்தகங்களை பூஜையில் வைத்து வழிபடுவதும் சிறப்பு.

* வாழ்க்கைக்கு அத்தியாவசியமான செல்வத்தை பெற, மகாலட்சுமி வழிபாட்டை நம் முன்னோர்கள் ஏற்படுத்தியிருக்கிறார்கள். அதே நேரம் மகாலட்சுமியை வழிபடுவதற்கும் சிறப்பான நாளாக, சித்திரை மாதம் அமாவாசைக்குப் பிறகு வரும் வளர்பிறை திருதியை திதியை தேர்வு செய்து வைத்துள்ளனர். இந்த திருதியை ‘அட்சய திருதியை’ என்று அழைக்கப்படுகிறது.

* திதிகளில் சிறப்புமிக்கதான பவுர்ணமி, அமாவாசை, சதுர்த்தி, ஏகாதசி போன்று, சித்திரை மாத வளர்பிறையில் வரும் திருதியையும் இணைந்திருக்கிறது. வாழ்விற்குத் தேவையான செல்வத்தை வழங்கும் சிறப்புமிக்க நாள் இதுவாகும்.

* யுகங்களில் முதல் யுகமான கிருதயுகம் தோன்றியது இந்நாளில்தான் என்றும், பிரம்மன் பூமியைத் தோற்றுவித்ததும், பரசுராமர் அவதாரம் நிகழ்ந்ததும், பகீரதன் கடும் தவம் செய்து ஆகாயத்தில் இருந்து கங்கையை பூமிக்கு கொண்டு வந்ததும், முதல் தெய்வமான ஈஸ்வரனுக்கு, அன்னை பார்வதி தேவி தன் கையில் இருக்கும் அட்சயப் பாத்திரத்தில் இருந்து உணவளித்ததும் இந்த நாளில் தான் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.

* ‘சயம்’ என்றால் ‘தேய்தல்’ அல்லது ‘குறைதல்’ என்பது பொருள். ‘அட்சயம்’ என்றால் ‘குறைவில்லாதது, அள்ள அள்ளக் குறையாதது’ என்று அர்த்தம். பஞ்ச பாண்டவர்களுக்கு, சூரியனால் வழங்கப்பட்ட அட்சயப் பாத்திரத்தில் எடுக்க எடுக்க குறையாத உணவு கிடைப்பது போன்று, அட்சயதிருதியை நன்னாளில் மகாலட்சுமியை வணங்கினால் குறையாத செல்வங்களைப் பெறலாம் என்பது ஐதீகம்.

* அட்சய திருதியை நாளில்தான், திருப்பதி வெங்கடாசலபதி தன் திருமணத்துக்காக குபேரனிடம் கடன் பெற்றதாகவும், குபேரனும் இதே நன்னாளில் மகாலட்சுமியை மனதார வேண்டி தனது செல்வத்தை என்றும் குறையாமல் பெருக்கிக் கொள்வதாகவும் ஐதீகம். எனவே அட்சய திருதியை நாளில், குபேர லட்சுமி பூஜை செய்வது சிறப்புக்குரியது. அதோடு பொன், பொருள் வாங்குவது, அலுவலக கணக்குகள், தொழில் சார்ந்த புத்தகங்களை பூஜையில் வைத்து வழிபடுவதும் சிறப்பு.


* சாதாரண உப்பிலும், அரிசி போன்ற தானியங்களிலும், மஞ்சள் போன்ற மங்கலப் பொருட்களிலும் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். எனவே அட்சய திருதியை தினத்தில் உப்பு, தானியம் அல்லது மஞ்சளை வாங்கி வீட்டில் வைக்கலாம். நல்ல எண்ணங்களோடு நல்ல செயல்களும் உள்ள இடத்தில் மகாலட்சுமியின் அருள் நிச்சயம் இருக்கும்.

* அட்சய திருதியை அன்று செய்யப்படும் சத்ய நாராயண பூஜை, அனைத்து செல்வங்களையும் தங்குதடையின்றி அருளும். பூஜை அறையில் கோலமிட்டு அதன்மேல் ஒரு மனைப் பலகையில் நுனி வாழை போட வேண்டும். அந்த இலையின் நடுவில் முனைமுறியாத பச்சரிசியைப் பரப்பி, அதன்மேல் ஒரு செம்பில் தூயநீரை நிரப்பி, மாவிலை மற்றும் மஞ்சள் தடவிய தேங்காய் வைத்து, அம்பிகை குடிகொள்ளும் கலசமாக மாற்ற வேண்டும். கலசத்தை பூக்களால் அலங்கரிக்க வேண்டும். இலையின் வலப்புறம் மஞ்சளால் பிடித்த பிள்ளையாரை வைக்கவேண்டும். கலசத்தின் அருகே நெல் நிறைத்து வைத்து ஐந்துமுக குத்துவிளக்கேற்றி லட்சுமி நாராயணர் படம் வைத்து, நைவேத்தியம் படைத்து, தீப- தூபம் காட்டி வழிபாடு செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் லட்சுமியின் அருள் முழுமையாக கிடைக்கும் என்பது ஐதீகம்.

* அட்சய திருதியை நாளில், மகாலட்சுமியை மனதார வணங்கி, ஆதரவற்ற ஏழைகளுக்கு தேவைப்படும் பொருட்களை வாங்கித்தந்து அவர்களை மகிழ்விக்கலாம். தானங்களில் சிறந்த அன்னதானம், வஸ்திர (உடை) தானம் போன்றவற்றை செய்வதோடு, கல்வி பயில வசதியின்றித் தவிக்கும் பிள்ளைகளுக்கு உதவுவதும் உங்களுக்கு புண்ணியத்தைப் பெற்றுத் தரும். அதோடு இந்த நாளில் புதிய செயல்களை தொடங்குவது, வீடு, நிலம் போன்ற விலை மதிப்பற்ற பொருட்களை வாங்குவது, மரக்கன்றுகள் நடுவது, முதியோர் இல்லங்களுக்கு உதவுவது, இயலாதவர்களுக்கு சேவை செய்வது போன்றவற்றை மனம் உவந்து செய்தால், நம் வாழ்வில் வளங்கள் பெருகும்.

* ‘அட்சயம்’ என்றால் அளவில்லாதது என்பதால், அட்சய திருதியை நாளில் மட்டுமல்லாது, மற்ற தினங்களிலும் கூட, அளவற்ற அன்புடனும் முயற்சியுடனும் நாம் காரியங்களைச் செய்து வந்தால், அளவில்லாத வெற்றியும், அனைத்து செல்வங்களும் அன்னையின் அருளால் நம்மைத் தேடி வரும்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!