குடும்ப வறுமையில் சலூன் கடை நடத்தி வரும் சகோதரிகள் – உதவிய சச்சின் தெண்டுல்கர்


உத்தரப்பிரதேச மாநிலம் பன்வாரி தோலா என்ற கிராமத்தைச் சேர்ந்த சகோதரிகள் நேஹா மற்றும் ஜோதி. இவர்களது தந்தை சலூன் ஒன்றை நடத்தி வந்தார். கடந்த 2014ம் ஆண்டு தந்தையின் உடல்நிலை திடீரென பாதிக்கப்பட்டு அவர் படுத்தப் படுக்கையாகிவிட்டார். இதனையடுத்து நேஹா, ஜோதி இருவரும் தந்தை நடத்தி வந்த சலூன் கடையை தங்கள் பொறுப்பில் எடுத்துக் கொண்டனர்.

அந்த கடைக்கு ‘பார்பர்ஷாப் கேர்ள்ஸ்’ என்ற பெயர் சூட்டி இப்போது சகோதரிகள் இருவரும் சலூனை நடத்தி வருகிறார்கள். சலூனில் இருந்து கிடைக்கும் வருமானத்தை கொண்டு தந்தையின் சிகிச்சை செலவை கவனித்துக் கொள்வது மட்டும் அல்லாமல் வீட்டுச் செலவையும் கவனித்து வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன் நேஹா, ஜோதி நடத்தி வரும் சலூனுக்கு சென்ற முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் அந்த கடையில் முகச்சவரம் செய்து கொண்டார்.

அவருக்கு மூத்த சகோதரியான நேஹா முகச்சவரம் செய்தார். கிரிக்கெட் ஜாம்பவான் என்று அழைக்கப்படும் சச்சின் தெண்டுல்கர் தங்கள் கடைக்கு வந்து முகச்சவரம் செய்ததை கண்டு பூரித்து போயினர். இதைத்தொடர்ந்து ஜில்லெட் நிறுவனம் சார்பில் சகோதரிகள் கல்வி மற்றும் தொழில் தேவைக்கான நிதியுதவியை சச்சின் தெண்டுல்கர் வழங்கினார். நேஹாவிடம் முகச்சவரம் செய்து கொண்டபோது எடுத்த படத்தை சச்சின் டெண்டுல்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்தார்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!