எரியும் வீட்டிற்குள் குதித்து அசம்பாவிதத்தை தவிர்த்த போலீஸ் அதிகாரி – வைரல் புகைப்படம்..!


உத்தரபிரதேசத்தில் தீப்பற்றிய வீட்டினுள் நுழைந்து தீயை அணைக்க முயன்ற போலீசின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள நொய்டாவின் அலம்கானி பகுதியில் புல்கீத் – கீதா தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களது வீட்டில் நேற்று மதியம் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

இதையடுத்து என்ன செய்வதென அறியாத தம்பதி, அருகிலிருந்த வீட்டுக்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து போன் மூலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இந்த தகவல் அறிந்த எஸ் பி அகிலேஷ் குமார் தீக்‌ஷித் சம்பவ இடத்திற்கு விரைந்தார்.

வீட்டின் உரிமையாளர் புல்கீத், வீட்டினுள் இரண்டு கேஸ் நிரப்பப்பட்ட சிலிண்டர்கள் இருப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் வரும் வரை காத்திருக்காமல் உடனடியாக அனைவரும் வியக்கும் வண்ணம் அகிலேஷ் உடனடியான நடவடிக்கை மேற்கொண்டார்.


தீ வீடு முழுவதும் பரவிய போதும், சிறிதும் சிந்திக்காமல் அருகிலிருந்த போர்வையினை எடுத்து தன் மீது சுற்றிக் கொண்டு வீட்டினுள் நுழைந்து கேஸ் சிலிண்டர்களை வெளியே கொண்டு வந்தார். இதனால் அங்கு நடக்கவிருந்த மாபெரும் அசம்பாவிதம் தடுத்து நிறுத்தப்பட்டது.

மேலும் தீயை அணைக்க தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வந்தார். இந்த காட்சிகளை அருகில் இருந்தவர்கள் தங்கள் செல்போன் கேமிராவில் படம் பிடித்தனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. அகிலேஷை ஹீரோ என அனைவரும் கமெண்ட்களில் பாராட்டி வருகின்றனர்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!