இழிவாக பேசி வாட்ஸ் அப்பில் ஆடியோ வெளியிட்டு கலவரத்தை தூண்டிய சிங்கப்பூர் பெண் கைது..!


ஒரு சமூகத்தினர் பற்றி இழிவாக பேசி வாட்ஸ் அப்பில் ஆடியோ வெளியிட்ட சிங்கப்பூர் பெண் கைது திருச்சி விமான நிலையத்தில் போலீசார் மடக்கினர்

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியில் ஒரு சமூகத்தை பற்றி வாட்ஸ்அப்பில் அவதூறு ஆடியோ வெளியிடப்பட்டது. இந்த சம்பவத்தால் பொன்னமராவதியில் பயங்கர கலவரம் ஏற்பட்டது. இதையடுத்து அவதூறு ஆடியோ வெளியிட்டது தொடர்பாக சிலரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்தநிலையில் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியை சேர்ந்த சில கிராம பெயர்களை உச்சரித்தும், ஒரு சமூகத்தினரை இழிவாக பேசியும் ஒரு பெண், வாட்ஸ் அப் ஆடியோவை கடந்த ஏப்ரல் மாதம் பதிவிட்டார். இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இதையடுத்து வாட்ஸ்அப் ஆடியோவில் பேசிய பெண்ணை கைது செய்ய வேண்டுமென மாதவன் குடிக்காட்டை சேர்ந்த முருகையன் என்பவர் பாப்பாநாடு போலீஸ் நிலையத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 23-ந்தேதி புகார் செய்தார். இது குறித்து பாப்பாநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமலதா வழக்குப்பதிவு செய்து வாட்ஸ்அப்பில் வெளியான ஆடியோவில் பேசிய பெண் யார்? என்று விசாரணை நடத்தி தேடி வந்தனர்.

இந்தநிலையில் அந்த பெண் சிங்கப்பூரில் 10 ஆண்டுகளாக வேலை செய்து வருவதும், மாதவன் குடிக்காட்டை சேர்ந்த கனிமொழி (வயது 40) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்த போலீசார், அவரது விவரங்களை திருச்சி, சென்னை, மும்பை ஆகிய விமான நிலையங்களுக்கு தெரிவித்தனர்.

இந்தநிலையில் நேற்று சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு கனிமொழி வந்தார். அப்போது அவரை திருச்சி ஏர்போர்ட் போலீசார் கைது செய்து பாப்பாநாடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் திருச்சி சென்று கனிமொழியிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவரை ஒரத்தநாடு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி ,1 5 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டதையடுத்து கனிமொழி திருச்சி மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!