ஒடிசாவில் 175 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் மழையால் பீதியில் மக்கள்..!


ஒடிசா மாநிலத்தின் கோபால்பூர் – சந்தபாலி இடையே பானி புயல் கரையை கடக்கத் தொடங்கியது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பானி புயல் கரையை கடக்கத் தொடங்கி இருப்பதால் ஒடிசா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. 8 மணிக்கு கரையை கடக்கத் தொடங்கிய பானி புயலின் தாக்கம் காலை 11 மணி வரை இருக்கும்.

புரி, கோபால்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. புரி நகருக்கு தென்மேற்கு பகுதியில் இருந்த பானி புயல் நகர்ந்து வருவதால் ஒடிசாவில் கனமழையுடன், அதிக வேகத்தில் காற்று வீசி வருகிறது.

சுமார் 175 கி.மீ. வேகத்துக்கும் அதிகமாக காற்று பலமாக வீசி வருகிறது. இதனால் அம்மாநில மக்கள் அச்சமடைந்து உள்ளனர்.

இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில், அடுத்த 6 மணி நேரத்திற்கு ஒடிசாவில் மோசமான வானிலை நிலவும். ஒடிசாவின் வரலாற்றில் இல்லாத அளவிற்கு அசுர காற்று வீசி வருகிறது. அசுரப் புயலாக பானி மாறியதால், புரி உள்ளிட்ட மாவட்டங்களில் சூறாவளி காற்று வீசுகிறது. கடந்த 43 ஆண்டுகளில் இதுபோன்ற வலுவான புயல் ஒன்று உருவாகி கரையை கடந்ததில்லை என தெரிவித்துள்ளனர்.

போனி புயல் கரையை கடந்து வருவதால் ஆந்திராவில் விசாகப்பட்டினம், மச்சிலிப்பட்டினம், கிருஷ்ணாபட்டினம், காக்கிநாடா உள்ளிட்ட துறைமுகங்களில் 10 ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.-Source: webdunia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!