தனுசு ராசிக்காரர்களே உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுப்பது உத்தமம் – விகாரி புத்தாண்டு பலன்கள்..!


கள்ளம் கபடமின்றி உண்மையை மட்டுமே பேசும் குணம் கொண்ட தனுசு ராசி நேயர்களே! உங்களுக்கு என் மனமார்ந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த விகாரி ஆண்டில் நீங்கள் உங்கள் வாழ்வில் பல்வேறு இடையூறுகளை சந்திக்க வேண்டியிருக்கும். ஜென்ம ராசியில் சனி, கேது சஞ்சரிப்பதும், 7-ல் ராகு சஞ்சாரம் செய்வதும் குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும் அமைப்பாகும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படுவதால் மனநிம்மதி குறையும். குருபகவானும் 12-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் தேவையற்ற வீண் விரயங்கள் அதிகரிக்கும். திருக்கணிதப்படி இவ்வருடம் ஐப்பசி மாதம் 19-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் 05-11-2019 (வாக்கியப்படி ஜப்பசி 12-ஆம் தேதி) முதல் குரு பகவான் ஜென்ம ராசியிலேயே சஞ்சரிக்க இருப்பதும் சாதகமான அமைப்பு என்று கூற முடியாது என்பதால் பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும். முடிந்தவரை ஆடம்பர செலவுகளை குறைப்பது, அதிகப்படியாக கடன்கள் வாங்குவதை தவிர்ப்பது உத்தமம்.


திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைவதில் தாமத நிலை ஏற்பட்டாலும் சிறுசிறு தடைகளுக்குப் பின் ஆண்டின் பிற்பாதியில் குரு 7-ம் வீட்டை பார்ப்பதால் திருமணம் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடப்பது, பேச்சில் நிதானத்தை கடை பிடிப்பது போன்றவற்றால் குடும்பத்தில் ஒற்றுமையை நிலை நாட்ட முடியும். உற்றார் உறவினர்களால் சிறுசிறு ஆதாயங்களைப் பெறுவீர்கள். சொந்த பூமி, மனை வாங்கும் விஷயங்களில் சிந்தித்து செயல்படுவது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் முடிந்தவரை பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது, பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது, முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்ப்பது உத்தமம். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் நிலவினாலும் வரவேண்டிய லாபங்கள் கைக்கு வந்து சேரும். வெளியூர், வெளிநாட்டு தொடர்பு உடையவற்றால் சற்று அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அதன் முலம் ஆதாயப் பலன்களையும் அடைவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்து பணியில் கவனம் செலுத்துவது நல்லது. எதிலும் சிந்தித்து செயல்பட்டால் சாதகமானப் பலன்களைப் பெறுவீர்கள்.

உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி ஏதாவது பாதிப்புகள் தோன்றியபடியே இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்திலும் உணவு விஷயத்திலும் கட்டுபாட்டுடன் இருப்பது உத்தமம். உங்களின் முன்கோபத்தால் தேவையற்ற வாக்குவாதங்களும் குடும்பத்தில் பிரச்சனைகளும் ஏற்பட்டு மனநிம்மதி குறையும் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.


குடும்பம் பொருளாதார நிலை
கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்கு வாதங்களும், சண்டை, சச்சரவுகளும் ஏற்படக் கூடிய காலம் என்பதால் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களால் ஓரளவுக்கு ஆதாயங்களைப் பெறுவீர்கள். பணவரவில் சிறுசிறு நெருக்கடிகள் ஏற்பட்டாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். திருமண சுபகாரியங்கள் சில தடை தாமங்களுக்குப் பின் கைகூடும். புத்திர வழியில் மகிழ்ச்சித் தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும்.

உத்தியோகம்
பணியில் நிம்மதி குறைவுகள், வீண் பழிச் சொற்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்பட்டு எதிலும் ஈடுபாடற்ற நிலை உண்டாகும் என்றாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றலும் ஏற்படும். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் சில தடை தாமங்களுக்குப் பின் கிடைக்கும். சிலருக்கு விரும்பிய இடமாற்றங்களும் அமையும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பம் நிறைவேறும். பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடிப்பதால் அனைவரின் ஆதரவையும் பெறுவீர்கள்.

தொழில் வியாபாரம்
கூட்டுத் தொழில் செய்பவர்கள் எதிர்பார்த்த லாபங்களை அடைவதில் சில சிக்கல் ஏற்படும். நிறைய போட்டி பொறாமைகளையும் மறைமுக எதிர்ப்புகளையும் எதிர்கொள்ள நேரிடும். எதிலும் சிந்தித்து செயல்படுவது கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து நடந்து கொள்வது போன்றவற்றால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். தேவையற்ற பயணங்களை தவிர்த்தால் அலைச்சல்கள் குறையும். கிடைக்கும் வாய்ப்புகளை நழுவ விடாமல் பாதுகாத்துக் கொள்வது உத்தமம்.


கொடுக்கல்- வாங்கல்
கொடுக்கல்- வாங்கலில் நெருக்கடிகள் தோன்றும் என்பதால் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்து செயல்படுவது நல்லது. கொடுத்த கடன்களை சில தடைகளுக்குப் பின் வசூலித்து விடுவீர்கள். அவ்வப்போது தேவையற்ற வம்பு வழக்குகள் மற்றும் பிரச்சினைகளை சந்திக்க நேர்ந்தாலும் எதையும் எதிர்கொள்ளக் கூடிய வலிமையும் வல்லமையும் கூடும். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிட்டும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று கடன்கள் படிபடியாக நிவர்த்தியாகும்.

அரசியல்
மக்களின் ஆதரவைப் பெறவே அரும்பாடுபட வேண்டியிருந்தாலும் எடுக்கும் முயற்சிகளில் அனுகூலங்களைப் பெறுவீர்கள். பணவரவுகளில் தடை தாமதங்கள் ஏற்பட்டாலும் எதிர்பாராத உதவிகள் கிட்டும். மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதால் ஒரளவுக்கு அவர்களின் செல்வாக்கினைப் பெறுவீர்கள். கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவு செய்ய வேண்டியிருந்தாலும் மறைமுக வருவாய்கள் அதிகரிக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது, உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுப்பது உத்தமம்.


விவசாயிகள்
பயிர் விளைச்சல் சிறப்பாக இருந்தாலும், புழு பூச்சிகளின் தொல்லைகளால் வீண் விரயங்கள் அதிகரிக்கும். எதிர்பாராமல் ஏற்படக் கூடிய செலவுகளை சமாளிக்க கடன் வாங்க வேண்டி வரும். உங்களுக்குள்ள வம்பு பிரச்சினைகள் யாவும் ஓரளவுக்கு விலகும். கால்நடைகளால் ஆதாயங்களைப் பெறுவீர்கள். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் நிலவும். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிட்டும்.

பெண்கள்
உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்ள வேண்டிய காலமாகும். கணவன்- மனைவி விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால் மட்டுமே எதிலும் ஒற்றுமையுடன் செயல்பட முடியும். சுப காரியங்கள் தடைகளுக்குப் பின் கைகூடும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் பொன் பொருள் யாவும் சேரும். சிலருக்கு வீடு மனை வாங்கும் யோகங்கள் உண்டாகும். தாய் வழியில் ஆதரவு கிட்டும். புத்திர பாக்கியம் ஏற்பட்டு மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும்.

மாணவ- மாணவிகள்
கல்வியில் முழு முயற்சியுடன் செயல்பட்டால் அடைய வேண்டிய இலக்கை அடைவீர்கள். ஆரோக்கிய பாதிப்புகளால் அடிக்கடி விடுப்பு எடுக்க வேண்டியிருந்தாலும் அயாராத உழைப்பால் நல்ல மதிப்பெண்களை பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் பாரட்டுதல்களை பெறுவீர்கள். தேவையற்ற நண்பர்களின் சகவாசங்களை தவிர்ப்பது உத்தமம்.-Source: muruguastrology

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!