கொஞ்சம் வெள்ளந்தி பேச்சு.. கொஞ்சம் செல்லமான பேச்சு – அசத்தும் மன்சூர் அலிகான்..!


நாம் தமிழர் கட்சி திண்டுக்கல் வேட்பாளர் மன்சூரலிகான் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அந்த வேட்பாளர் திடீரென அம்மிக்கல்லில் சட்னி அரைக்கிறார்.. தெருவில் கிடக்கும் குப்பையை அள்ளி கொட்டுகிறார்.. கீரை விற்கும் பெண்களிடம் போய் பேசுகிறார்.. காய்கறி விற்கும் பாட்டியிடம், இந்த முருங்கைக்காய் என்ன விலை பாட்டி என கேட்கிறார்.. யார் அவர் என்று உற்றுபார்த்தால்.. அட.. நம்ம மன்சூர்அலிகான்தான்!

திண்டுக்கல் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக நடிகர் மன்சூர் அலிகான் போட்டியிடுகிறார். இதற்கான பிரச்சாரத்திலும் இறங்கி உள்ளார்.

இவரது பிரச்சார பாணியே தனி தினுசாக இருக்கிறது. ஒரு நடிகர் என்ற பந்தா கிடையாது. இது பிரச்சாரத்திற்காக இல்லை. எப்பவுமே மன்சூர் அலிகான் அப்படித்தான். வெகு இயல்பான மனிதர்!

நடிகன் என்பது தொழிலாக இருந்தாலும், இவர் ஒரு சமூக ஆர்வலர். மக்களுக்கு எதிரான திட்டங்களுக்கு குரல் கொடுப்பவர். கொஞ்சம் ஓவராக குரல் கொடுத்தால் போதும், அடுத்த செகண்டே போலீசார் அள்ளி கொண்டு போய்விடுவார்கள்.

கடந்த சில நாட்களாகவே திண்டுக்கல்லில் தான் மன்சூர் அலிகான் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஒரு பந்தாவும் இல்லாமல் மக்களோடு மக்களாக அவர் பேசுவது அவர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. சைக்கிளில் ரவுண்டு அடித்தபடியே ஓட்டு கேட்கிறார். பிறகு கையில் கிளவுஸ் கூட இல்லாமல் தெருவை சுத்தம் செய்து குப்பையை அள்ளுகிறார். பிறகு அந்த குப்பை வண்டியை ஓட்டி கொண்டு போகிறார்.


குப்பையை கொட்டியதுடன் சும்மாவிட்டாரா, அப்போதுதான் வேலைக்கு வந்த துப்புரவு தொழிலாளர்களிடம் ஏன் வேலைக்கு இவ்ளோ லேட்டா வர்றீங்க? என்று கேள்வியும் எழுப்புகிறார். அம்மிக்கல்லில் சட்னி அரைத்து கொடுத்து பெண்களுக்கு உதவுகிறார். அந்த வழியாக கீரை விற்கும் பெண்கள் சென்றாலோ, அல்லது காய்கறிகள் விற்கும் பாட்டிகள் சென்றாலோ, மனசார உரையாடுகிறார்.

இப்படித்தான் ஒரு பாட்டி காய்கறிகளோடு போய்ட்டு இருந்தாங்க. அவங்க கிட்ட சென்ற மன்சூர் அலிகான், “பாட்டி, இந்த முருங்கைக்காய் என்ன விலை?” என்கிறார். பாட்டியும் 4 காய் 10 ரூபாய் என்கிறார். “என்னது.. 10 ரூபாய்க்கு நாலு காய்களா? எங்க ஊர்ல ஒன்னுதான் தராங்க பாட்டி.. அங்கே மோடி விவசாயிகளுக்கு கடன் தர மாட்டேங்குறார்.. ஆனால் இங்க நீங்க மக்களுக்கு இவ்வளவு பண்றீங்களே” என்று வெகுஜன அரசியலை சரளமாக எடுத்து விடுகிறார்.

கையில் ஒரு கம்பை வைத்து கொண்டு, “எனக்கு மட்டும் ஓட்டு போடவில்லைன்னா இந்த கம்பாலேயே மண்டையை ஒடைப்பேன் என்று உரிமையாகவும் ஜாலியாகவும் சொல்கிறார். யாராவது செல்பி எடுக்க வந்தால், “எவ்ளோ செல்பி வேணுமோ எடுத்துக்குங்க.. ஆனா ஓட்டு மட்டும் எனக்கு போட்டுடனும். இல்லேன்னா வெட்டிடுவேன் என்று செல்லமாக பேசி நகர்கிறார்.

கொஞ்சம் வெள்ளந்தி பேச்சு.. கொஞ்சம் செல்லமான பேச்சு.. கொஞ்சம் அரசியல் வாடை.. என எல்லாம் கலந்து திண்டுக்கல் பகுதி மக்களின் மனசில் இடம்பிடித்து வருகிறார் நம்ம மன்சூரலிகான்! இந்த ஈரமனசுகாரனுக்கு எப்படியும் பெண்கள் வாக்கு ஓரளவுக்கு விழுவது நிச்சயமாம்.-Source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!