சென்னையில் பெற்றோரை தேடி அலையும் வாலிபர் – 4 வயதில் நெதர்லாந்து குடும்பத்தால் தத்தெடுப்பு..!


சென்னை திருவேற்காடு ஸ்ரீ சண்முகா நகரில் உள்ள குழந்தைகள் காப்பகம் ஒன்றில் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு, நெதர்லாந்தை சேர்ந்த ஜூர்ரி டிரென்ட்-வில்மா டி நெய்ட் தம்பதி, லக்‌ஷ்மன் என்ற 4 வயது ஆண் குழந்தையை தத்தெடுத்தனர். அந்த தம்பதிக்கு ஏற்கனவே நீல்ஸ் டிரென்ட் என்ற மகன் உள்ளார். சமூக சேவையில் ஈடுபட்டு வந்த இந்த தம்பதி, ஒரு கட்டத்தில் அந்த குழந்தையை தங்களுடனேயே நெதர்லாந்துக்கு அழைத்து சென்றனர்.

கடந்த 20 வருடங்களாக நெதர்லாந்திலேயே வாழ்ந்து வந்த லக்‌ஷ்மனுக்கு திடீரென்று தனது உண்மையான பெற்றோரை பார்க்க வேண்டும் என்ற ஆசை எழுந்தது. இதையடுத்து தனது வளர்ப்பு பெற்றோரிடம் தனது ஆசையை அவர் தெரிவித்தார்.

இதையடுத்து ஜூர்ரி டிரென்ட் தனது மனைவி மற்றும் மகனுடன் லக்‌ஷ்மனை கடந்த 5-ந் தேதி இந்தியாவுக்கு அனுப்பிவைத்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை வந்த அவர்கள், சென்னையில் பல பகுதிகளுக்கு சென்று லக்‌ஷ்மனின் பெற்றோரை தேடி வருகின்றனர்.

இதுகுறித்து சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் மற்றும் மாநில குற்ற ஆவண காப்பகத்திலும் அவர்கள் மனு அளித்து உள்ளனர்.

இதுதொடர்பாக லக்‌ஷமன் கூறியதாவது:-

எனது உண்மையான பெற்றோரை பார்க்க ஆசையாக இருக்கிறேன். ஆனால் தாயின் பெயர் லோகம்மாள் என்பது மட்டுமே என் ஞாபகத்தில் இருக்கிறது. எனக்காக என் வளர்ப்பு தாயும், சகோதரரும் கஷ்டப்படுகிறார்கள். என் ஆசை அவர்களை பார்க்கவேண்டும் என்பது மட்டுமே. மற்றபடி அவர்களை பார்த்துவிட்டால் சந்தோஷத்துடன் நெதர்லாந்து செல்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

லக்‌ஷ்மன் நெதர்லாந்தில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!