குடும்ப கஷ்டத்தை நீக்குவதாக கூறி இளம் மந்திரவாதி செய்த கூத்து… சிக்கியது எப்படி..?


திருவாரூர் மாவட்டம் சேங்களாபுரம் ஐ.பி.கோவில் பகுதியை சேர்ந்த இளம் மந்திரவாதி பாலாஜி. இவருக்கும் கரூர் வையாபுரி நகரைச் சேர்ந்த பத்மபிரியா என்பவருக்கும் 20 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.

20 தினங்கள் கழித்து, திங்கட்கிழமை திருமண வரவேற்பு நிகழ்ச்சி கரூர் மேற்கு பிரதட்சனம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்து கொண்டிருந்தது. அப்போது உள்ளே வந்த இரு பெண்கள், மாப்பிள்ளைக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணம் நடந்து விட்டதாக கூறி வரவேற்பு நிகழ்ச்சியை தடுத்து நிறுத்தினர். இதனால் மணப்பெண் அதிர்ச்சி அடைந்தார்.

தகவல் அறிந்து திருமண மண்டபத்துக்கு வந்த காவல்துறையினர், மணமகனையும், மணமகளையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்…! அங்கு மணமகன் பாலாஜியிடம் விசாரித்தபோது, அவர் மாந்த்ரீகம் செய்து ஏற்கனவே 2 பெண்களை வசியப்படுத்தி காதல் வலையில் வீழ்த்தி திருமணம் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அதன்படி, கோவில் ஒன்றில் பூஜாரியிடம் கையாளாக வேலை செய்த போது மந்திரங்களை கற்றுக் கொண்ட பாலாஜி, தன்னை ஒரு சக்திவாய்ந்த மந்திரவாதியாக காட்டிக் கொண்டு பூசாரியின் மகள் ராஜ்கலாவை காதலித்து முதலாவது திருமணம் செய்துள்ளார். அதன் பின்னர் 2014 ஆம் ஆண்டு மாந்த்ரீக வேலைகளை செய்வதாக மகாலெட்சுமி என்பவரது வீட்டிற்கு சென்றுள்ளார். தோஷம் நீங்க சுவாமி சிலையை பிரதிஷ்டை செய்வதாக கூறி ஏமாற்றி மகாலெட்சுமியின் மகள் அபிராமியை மயக்கி திருமணம் செய்து கொண்டு தலைமறைவாகியுள்ளார்.

பின்னர் பாலாஜியை அழைத்து பேசி தங்கள் மகளுக்கு வரதட்சணையாக 50 சவரன் நகைகள் மற்றும் லட்சக்கணக்கில் பணம் ஆகியவற்றை கொடுத்து அனுப்பி உள்ளனர். இந்த நிலையில், 2 வது மனைவி அபிராமியின் நகைகளை விற்று பணத்தை வீடுவீடாக வாடகைக்கு இருந்து ஊதாரித்தனமாக வீணாக்கியுள்ளான் பாலாஜி, பணம் தீர்ந்ததும் கரூரில் ஒரு பெண்ணின் வீட்டில் அபிராமியை வேலைக்கு வைத்து விட்டு தலைமறைவானதாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில், அபிராமி தனது நிலைமை குறித்து தாய் மகாலெட்சுமிக்கு தெரிவிக்க, அவர் வழக்கறிஞர் மூலம் தேடுதல் வேட்டை நடத்தி கரூர் திருமண மண்டபத்தில் பாலாஜியை சிறை பிடித்துள்ளார்.

3 வது மனைவியுடன் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள பாலாஜி, மாந்த்ரீக செய்கையில் ஈடுபாடு உள்ளவன் என்பதால் இன்னும் எத்தனை பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று 2 வது மனைவி அபிராமியின் தாய் மகாலெட்சுமி கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆன்மீகத்தில் ஈடுபாடு உள்ளது போல நடித்து, தெய்வமே அருள்வாக்கு கூறுவதாக பொய்களை அவிழ்த்து விட்டு பொன்னையும், பொருளையும் அடையத்துடிக்கும் மந்திரவாதிகளிடம் பெண்கள் உஷாராக இல்லையெனில் என்ன மாதிரி விபரீதம் நிகழும் என்பதற்கு இந்த சம்பவமே ஒரு சான்று.-Source: polimernews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!