யூடியுப் பார்த்து கள்ளநோட்டு அடித்து சிக்கிய பட்டதாரி பெண் பரபரப்பு வாக்குமூலம்..!


கடலூர் பஸ் நிலைய வளாகத்தில் உள்ள பிளாட் பாரங்களில் ஏராளமான பெண்கள் பழக்கடைகள் மற்றும் பூக்கடைகள் வைத்துள்ளனர். நேற்று மதியம் 2 மணிக்கு டிப்-டாப்பாக உடையணிந்த ஒரு இளம்பெண் வந்தார். அங்கு பழங்கள் விற்பனை செய்து கொண்டிருந்த குமுதா என்பவரிடம் பழங்களை வாங்கினார். பின்னர் அவர்தான் வைத்திருந்த 2 ஆயிரம் ரூபாயை கொடுத்தார்.

குமுதா அந்த ரூபாயை வாங்கி கொண்டு தன்னிடம் சில்லரை இல்லாததால் அருகில் பழம் விற்பனை செய்து கொண்டிருந்த தமிழரசி என்பவரிடம் கொடுத்து சில்லரை கேட்டார். தமிழரசி அந்த ரூபாய் நோட்டை வாங்கி பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

சந்தேகம் அடைந்த அவர் அருகில் உள்ள கடைக்கு சென்று மாற்றி வருகிறேன் என்று கூறினார். பின்னர் தமிழரசி 2 ஆயிரம் ரூபாயை வாங்கி கொண்டு பஸ் நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையத்துக்கு சென்றார். அங்கிருந்த போலீசாரிடம் 2 ஆயிரம் ரூபாயை காண்பித்தார். இது கள்ள நோட்டு என்று போலீசார் கூறினர்.

இதைத்தொடர்ந்து தமிழரசி போலீசாரிடம், ஒரு பெண் பழங்களை வாங்கி கொண்டு கள்ள நோட்டை மாற்ற முயன்றார் என்று கூறினார். இதையடுத்து அந்த பெண்ணை பிடிக்க போலீசார் முடிவு செய்தனர்.

இது தொடர்பாக திருப்பாதிரிப்புலியூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் குமரய்யா தலைமையிலான போலீசார் பஸ் நிலையம் விரைந்து வந்தனர். கள்ள நோட்டை மாற்ற முயன்ற பெண்ணை பிடிக்க முயன்றனர். இதனை அறிந்த அந்த பெண் அங்கிருந்து நைசாக தப்பினார்.

பின்னர் அவர் கடலூரில் இருந்து பண்ருட்டி செல்லும் பஸ்சில் ஏறி அமர்ந்திருந்தார். இதனை போலீசார் பார்த்ததும், அந்த பெண்ணை மடக்கி பிடித்தனர்.

உடனே போலீசார் பிடிபட்ட அந்த பெண்ணை திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில் 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டு 33 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் 5, மேலும் 200 ரூபாய் நோட்டுகள் 6 என மொத்தம் 69 ஆயிரத்து 700 ரூபாய் இருந்தது. இவை அனைத்தும் கள்ள நோட்டுகளாகும். மேலும் அந்த பையில் 15 ஏ.டி.எம். கார்டுகளும் இருந்தன.

அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பிடிபட்ட பெண்ணிடம் துருவி துருவி விசாரணை நடத்தினர். அதில் அவர் சிதம்பரம் மாரியப்பா நகரை சேர்ந்த நந்தகுமார் என்பவரின் மனைவி பரணிகுமாரி (35) என்பது தெரியவந்தது. இவருக்கு ரூபிகா, சிவப்பிரியா என்ற 2 மகள்கள் உள்ளனர். பரணிகுமாரி சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. பட்டப்படிப்பு படித்துள்ளார்.

அவரது கணவர் நந்தகுமார் வியாபாரம் செய் துவந்தார். அதில் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவர் பல்வேறு இடங்களில் கடன் வாங்கியுள்ளார்.

இதனால் அவரது குடும்பத்தில் பணப்பிரச்சினை ஏற்பட்டது. கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டுள்ளனர். இதனால் பரணிகுமாரி மனவேதனை அடைந்தார். மேலும் குடும்பம் வறுமையில் வாடியது. பரணிகுமாரி செல்போன் மூலம் அடிக்கடி யூடிப் பார்த்து வந்துள்ளார். அதில் ஜெராக்ஸ் எந்திரம் மூலம் கள்ள ரூபாய் நோட்டுகளை தயாரிக்கும் கும்பல் பற்றிய தகவலை பார்த்துள்ளார்.

இந்த கள்ள ரூபாய் நோட்டுகளை மாற்றுவது எப்படி? என்பது குறித்தும் விளக்கமாக பார்த்து வந்துள்ளார். தனது குடும்பம் வறுமையில் வாடியதால் கடன் பிரச்சினையை தீர்க்க கள்ள நோட்டுகளை தயாரிக்க பரணிகுமாரி முடிவு செய்தார்.

இதனையடுத்து அவர் கலர் ஜெராக்ஸ் எந்திரம் ஒன்றை வாங்கினார். அதனை வீட்டில் கணவருக்கும், குழந்தைகளுக்கும் தெரியாமல் மறைத்து வைத் திருந்தார். பின்னர் அவர் வீட்டில் யாரும் இல்லாத போது ஜெராக்ஸ் எந்திரம் மூலம் 2 ஆயிரம், 500, 200 ரூபாய் நோட்டுகளை பிரிண்ட் எடுத்துள்ளார். பின்னர் ஒரிஜினல் ரூபாய் நோட்டுகளை போல் அதனை வெட்டியுள்ளார்.

தொடர்ந்து. தான் தயாரித்த கள்ள நோட்டுகளை மாற்றுவதற்காக நேற்று மதியம் கடலூர் பஸ் நிலையம் வந்தார். பின்னர் அங்கிருந்த பிளாட்பார கடையில் பழங்களை வாங்கி கொண்டு 2 ஆயிரம் ரூபாய் நோட்டை கொடுத்து மாற்ற முயன்றபோது போலீசில் சிக்கியுள்ளார்.

மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும் இவருக்கு வேறு யாருடனாவது தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!