எச்.ஐ.வி. கிருமியிலிருந்து முழுமையாக குணம் அடைந்த இளைஞர்! இந்திய டாக்டரின் அற்புத சாதனை!


எச்.ஐ.வி. கிருமி தாக்கிய ஒருவருக்கு ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சை, நிவாரணம் தேடித்தந்துள்ளது. இதுகுறித்த தகவல்கள், உலக அரங்கை அதிர வைத்துள்ளன.

இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டனை சேர்ந்த ஆண் ஒருவரை 2003-ம் ஆண்டு எச்.ஐ.வி. கிருமி தாக்கியது. அதே நோயாளியை 2012-ம் ஆண்டு புற்றுநோய் தாக்கியது.

புற்றுநோய் சிகிச்சையாக அவருக்கு கெமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டது.

எச்.ஐ.வி. பாதிப்பில் இருந்து அவரை மீட்டெடுப்பதற்கு என்ன செய்யலாம் என லண்டன் பல்கலைக்கழக கல்லூரியின் பேராசிரியரும், இந்திய வம்சாவளி மருத்துவருமான ரவீந்திர குப்தா தலைமையில், அவருடன் பணியாற்றும் பேராசிரியர்கள், லண்டன் இம்பீரியல் கல்லூரி பேராசிரியர்கள், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக பேராசிரியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கூட்டாக ஆராய்ந்து ஒரு முடிவு எடுத்தனர்.

அந்த முடிவு, எச்.ஐ.வி. தாக்கியுள்ள நபருக்கு, ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை செய்யலாம் என்பதுதான்.

ஸ்டெம் செல் என்றால் என்ன கேள்வி எழுவது இயல்பு. இந்த உலகில் ஒரு குழந்தை பிறக்கிறபோது, அதன் தொப்புள்கொடி அறுக்கப்படுகிறது. அப்போது அதில் இருந்து வருகிற ரத்தம், தனிச்சிறப்புவாய்ந்த செல்களால் ஆனது. இந்த செல்கள்தான் ஸ்டெம் செல்கள். இவைதான் செல்களுக்கெல்லாம் மூல செல்கள் ஆகும்.

இந்த செல்களை வைத்து செய்யப்படுகிற சிகிச்சைதான் ஸ்டெம் செல் சிகிச்சை.

பல்வேறு நோய்களுக்கு இந்த ஸ்டெம் செல்களை வைத்து குணப்படுத்துவது தொடர்பாக உலக அளவில் விஞ்ஞானிகள் மாய்ந்து மாய்ந்து ஆராய்ச்சி நடத்தி வருகிறார்கள்.

அந்த வகையில்தான் லண்டன் எச்.ஐ.வி. நோயாளிக்கு ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை செய்வதற்கு இந்திய வம்சாவளி மருத்துவர் ரவீந்திர குப்தா தலைமையிலான குழு முடிவு செய்தது.

இதற்காக எச்.ஐ.வி. பாதிக்காத ஒருவரிடம் இருந்து ஸ்டெம் செல் தானம் பெறப்பட்டது.

அதைத் தொடர்ந்து எச்.ஐ.வி. நோயாளிக்கு ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது. அதைத் தொடர்ந்து அவர் எச்.ஐ.வி. பாதிப்புக்கு எடுத்து வந்த மருந்துகளை கடந்த 18 மாதங்களாக எடுத்துக்கொள்ளவில்லை.


இதுபற்றி பேராசிரியர் ரவீந்திர குப்தா கூறுகையில், ‘‘ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சையின் மூலம் எச்.ஐ.வி. தாக்கிய நோயாளிக்கு நிவாரணம் தேடித்தந்திருப்பது, உலகிலேயே இது இரண்டாவது முறை’’ என்றார்.

10 ஆண்டுகளுக்கு முன் ஜெர்மனியின் பெர்லின் நகரை சேர்ந்த தீமொத்தி பிரவுன் என்பவருக்குத்தான் உலகிலேயே முதல் முறையாக ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை மூலம் எச்.ஐ.வி. கிருமி பாதிப்பிலிருந்து நிவாரணம் பெற்றுத்தரப்பட்டது.

இப்போது லண்டன் நபருக்கும் அவ்வாறு ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை மூலம் தீர்வு தேடித்தரப்பட்டுள்ளது.

இதுபற்றி பேராசிரியர் ரவீந்திர குப்தா மேலும் கூறுகையில், ‘‘தற்போது எச்.ஐ.வி. தாக்கினால் அதற்காக வாழ்நாள் முழுக்க மருந்துகள் எடுத்துக்கொண்டு வர வேண்டும் என்பதுதான் சிகிச்சை. இது உலக நாடுகளுக்கு சவாலாக அமைந்துள்ளது. எச்.ஐ.வி. கிருமியை ஒழிப்பதற்கு ஒரு வழியை கண்டுபிடிப்பதற்கு ஒட்டுமொத்த உலகமும் முன்னுரிமை அளிக்க வேண்டும். ஆனால் இது கடினமான ஒன்று. ஏனென்றால், இந்த வைரஸ், வெள்ளை அணுக்களுக்குள் ஒன்றிணைந்து விடுகிறது’’ என்றார்.

மற்றொரு விஞ்ஞானியான எட்வர்டோ ஓலவார்ரியா கூறும்போது, ‘‘ஸ்டெம் செல் மாற்று சிகிச்சையில் இப்போது கிடைத்துள்ள வெற்றி, எச்.ஐ.வி. நோயாளிகளுக்கு நிவாரணம் அளிப்பதில் புதிய வியூகங்களை வகுக்க முடியும் என்ற நம்பிக்கையை அளித்துள்ளது’’ என்று குறிப்பிட்டார்.

உலகமெங்கும் ஆண்டுக்கு 10 லட்சம் எச்.ஐ.வி. நோயாளிகள் உயிரிழக்கிறார்கள். இதை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டு வர வேண்டுமானால், இந்த ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை தொடர வேண்டும், எல்லா நோயாளிகளும் இந்த சிகிச்சையை பெறலாம் என்ற நிலை வரவேண்டும். அதற்கு ஸ்டெம் செல்களை சேகரிப்பது கட்டாயம் என்ற சூழலும் உருவாக வேண்டும். அப்படி உருவாகிற நாள்தான் எச்.ஐ.வி. நோயாளிகள் வாழ்வில் பொன் நாளாக மாறும்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!