நரகத்திற்கு போனாலும் வெயிட்டிங் லிஸ்ட் தான் – நாஞ்சில் சம்பத் திமுக மேடையில் ‘திடீர்’ பிரசாரம்..!


திமுக தலைவர் முக ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி துறைமுகம் தொகுதிக்குட்பட்ட தம்பு செட்டி தெருவில் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் தினகரன் கட்சியான அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்து விலகிய நாஞ்சில் சம்பத் பங்கேற்று பேசினார்.

அரசியலில் இருந்து விலகி விட்டதாகவும் இனி இலக்கிய மேடைகளில் என்னை அதிகமாக பார்க்கலாம் என்றும் தெரிவித்திருந்த நாஞ்சில் சம்பத், திமுக மேடையில் தோன்றி திடீர் பிரசாரத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த கூட்டத்தில் பேசிய நாஞ்சில் சம்பத், திமுக தலைவர் முகஸ்டாலினை பாராட்டியும் புகழ்ந்தும் பேசினார். மத்தியில் உள்ள மோடி அரசுக்கு எதிராகவும், அதிமுக அரசுக்கு எதிராகவும் சரமாரியான குற்றச்சாட்டுகளை கூறி விமர்சித்தார். அவரது பேச்சு வருமாறு:-

இந்தியாவின் பிரதமர் பெயரை அறிவிக்கிற துணிச்சல் முக ஸ்டாலினுக்கு மட்டுமே இருக்கிறது. இதை கேட்கும்போது நான் ஏதோ முடிவு எடுத்து விட்டேன் என்று உங்களுக்கு தோன்றலாம். முடிவு எடுக்கவில்லை. ஆனால் பாசிச சக்தியை ஒழிப்பதற்கு எனது குரல் ஏதாவது ஒரு மேடையில் ஒலித்துக் கொண்டே இருக்கும்.

எனது பேச்சுக்களை புத்தகமாக தொகுக்க வேண்டிய பணி எனக்கு இருக்கிறது. எனவே இனி அந்த பணியில் ஈடுபடப் போகிறேன். ஒரு திரைப்படத்திலும் நடிக்க வாய்ப்பு வந்தது. அதையும் பயன்படுத்திக் கொண்டேன். சினிமாவில் நடித்த பிறகு வீதியில் இறங்கி நடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்கிற சிமிழுக்குள் இந்தியாவை அடைக்க பாசிச சக்திகள் முயலுகின்றன. அதை ஒழிக்கும் முயற்சியில் எனது குரல் ஒலிக்காமல் போகுமானால் நான் உயிரோடு இருப்பதில் அர்த்தம் இல்லை.

நான் திமுகவில் இடம் பெற சீட் போடுவதற்காக இந்த கூட்டத்துக்கு வந்திருப்பதாக பலர் கூறலாம். கலைஞரின் சொற்கள் இன்னும் என்னை இயக்கிக் கொண்டிருக்கிறது.

இந்தியா ஒரு நாடல்ல. இது இணைக்கப்பட்ட துணைக்கண்டம். திராவிட இயக்கத்தில் பற்று கொண்ட நாங்கள் இந்தியா என்று சொல்ல மாட்டோம். இந்திய துணைக் கண்டம் என்றே சொல்லுகிறோம். நீங்கள் எங்கள் மீது இந்தியை திணிக்கிறீர்கள்.

இன்று ஆன்லைனை திறந்தால் மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு துறையின் நூலகத்தில் இந்தி மொழிக்கு மட்டும் 3 லட்சம் நூல்கள் இருக்கின்றன. ஆனால் தமிழ் மொழிக்கு ஒரு நூல் கூட இல்லை.

இன்று ஒரு அற்புதமான கூட்டணி அமைந்திருக்கிறது. நரகத்திற்கு போனாலும் அவர்கள் வெயிட்டிங் லிஸ்டில்தான் இருப்பார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த நாஞ்சில் சம்பத் கடந்த சில நாட்களுக்கு முன்பு அளித்த பேட்டி ஒன்றில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை ஆதரித்து பிரசாரம் செய்வேன் என்று கூறி இருந்தார். இந்த நிலையில்தான் திமுக மேடையில் அவர் பங்கேற்று பேசியுள்ளார்.

பாராளுமன்ற தேர்தல் நேரத்தில் நாஞ்சில் சம்பத் திமுக மேடையில் பேசி இருப்பதன் மூலம் நாஞ்சில் சம்பத் திமுகவில் சேருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்யவும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!