ராமதாஸ் கொடுத்த பார்ட்டி… தூக்கி வீசப்பட்ட கார் – கோர விபத்தில் அ.தி.மு.க எம்.பி மரணம்..!


விழுப்புரம் தொகுதி அதிமுக எம்.பி. ராஜேந்திரன், இன்று அதிகாலை ஏற்பட்ட கார் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 62. சாலையின் நடுவே கட்டப்பட்டு வரும் தடுப்பு குறித்த முன்னெச்சரிக்கை அறிவிப்பு இல்லாதது, சீட் பெல்ட் அணியாததால், ஏர் பேக் வேலை செய்யாதது ஆகியவையே உயிரிழப்புக்குக் காரணமாக அமைந்து விட்டதாகக் கூறப்படுகிறது.

விழுப்புரம் மாவட்டம் ஆதனப்பட்டு என்ற கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன், விழுப்புரம் தொகுதி அதிமுக எம்.பி…..நேற்று தைலாபுரம் தோட்டத்தில் அதிமுகவினருக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் அளித்த விருந்தில் அவர் கலந்து கொண்டார். இரவில் திண்டிவனத்தில் உள்ள சுற்றுலா மாளிகையில் தங்கிய அவர், இன்று அதிகாலை 5.30 மணி அளவில் டொயொட்டா இட்டியாஸ் VXD ரக காரில் சென்னை புறப்பட்டார்.

காரை, அருமைச் செல்வம் என்பவர் ஓட்டியுள்ளார். எம்.பி.யின் உறவினரான தமிழ் செல்வன் என்பவரும் உடன் பயணித்துள்ளார். திண்டிவனத்தை அடுத்த சிலோச்சனா பங்காரு திருமண மண்டபம் அருகே கார் சென்ற போது, சாலையின் நடுவே கட்டப்பட்டு வரும் தடுப்பின் மீது வேகமாக மோதியது. இதில் கார் முன் பகுதி முழுவதும் சிதைந்து போனது. எம்.பி.ராஜேந்திரனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தமிழ்ச்செல்வன் மற்றும் அருமைச் செல்வத்துக்கும் காயம் ஏற்பட்டது. உடனடியாக எம்.பி.ராஜேந்திரன் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ராஜேந்திரனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு திரண்ட ராஜேந்திரனின் உறவினர்கள், உடலைப் பார்த்து கதறி அழுதனர்.

62 வயதான ராஜேந்திரனுக்கு சாந்தா என்ற மனைவியும், இரு மகள்கள் மற்றும் ஒரு மகனும் உள்ளனர். தற்போது சென்னையில் பணிபுரியும் அவரது மனைவி திண்டிவனம் சென்று கொண்டிருப்பதால், எம்.பி. ராஜேந்திரனின் உடற்கூறாய்வு இன்னும் தொடங்கவில்லை.

இதனிடையே, காரில் சீட் பெல்ட் அணியாத காரணத்தால் விபத்தின் போது ஏர் பேஃக் வேலை செய்யாமல் தலையில் பலமாக அடிபட்டு ராஜேந்திரன் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், தடுப்புச் சுவர் கட்டப்படுவது குறித்து முன் எச்சரிக்கை எதுவும் இல்லாததால், ஒரே வேகத்தில் சென்ற காரானது, திடீரென தொடங்கிய சாலை தடுப்பின் மீது மோதி பயங்கரமான விபத்துக்குள்ளாகி இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.-Source: polimernews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!