நீ அவளோடு வாழவே கூடாது – மகளின் காதல் கணவனுக்கு தந்தையால் நேர்ந்த கொடூரம்..!


“என்னுடைய மகள் உன்னோடு வாழக்கூடாது. நான் இருக்கும் வரை உங்களை நிம்மதியாக வாழவிடமாட்டேன்” என்று கூறி காதலி கண்முன்பே காதலன் மற்றும் அவரின் குடும்பத்தினரை அரிவாளால் பெண்ணின் தந்தை வெட்டினார். இந்தச் சம்பவம் அரியலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம், நாணங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரெங்கேசன் மகன் அஜித்குமார். சுண்டக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம். இவரின் மகள் முத்துராணி. இவர்கள் இருவரும் திருவையாறில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகின்றனர்.

இருவரும் 2 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில், இருவரும் அவர்களுடைய பெற்றோர்களிடம் காதலைச் சொல்லி திருமணத்துக்கு அனுமதி கேட்டுள்ளனர். பெற்றோர்கள் சம்மதிக்காததால், கடந்த சில நாள்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி திருமணம் செய்துகொண்டது.

இந்த நிலையில், தன் மகளை காணவில்லை என்று முருகானந்தம் கீழப்பழுவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் அவர்களைக் கண்டுபிடித்து அழைத்து வந்துள்ளனர். நேற்று மாலை இரு குடும்பத்தை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது முத்துராணி காதலித்த அஜித்குமாரோடு செல்வதாக உறுதியாக இருந்துள்ளார். பெண் ‘மேஜர்‘ என்பதால் போலீஸார் காதலர்கள் இருவரிடமும், அவர்களின் குடும்பத்தாரிடமும் வாக்குமூலம் எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்துள்ளனர். இதையடுத்து அஜித்குமார், தன் மனைவி முத்துராணி மற்றும் அவரின் குடும்பத்தாரை அழைத்துக்கொண்டு காரில் சென்றுகொண்டிருந்தனர்.

இதனிடையே, அவர்களைத் தாக்க பெண்ணின் தந்தை முருகானந்தம், பெண்ணின் சகோதரர்கள் விக்னேஸ்வரன் மற்றும் அவரது நண்பர்கள் திட்டம் தீட்டியிருக்கிறார்கள். இந்த நிலையில், அஜித்குமார் அவரின் குடும்பத்தினர் கீழப்பழுவூர் பெட்ரோல் பங்க் அருகே சென்று கொண்டிருந்தபோது, அவர்களை வழிமறித்த பெண் வீட்டார், காரின் கண்ணாடிகளை உடைத்து, “என் மகள் உன்னோடு வாழக்கூடாது. நான் இருக்கும் வரையிலும் உங்களை நிம்மதியாக வாழவிடமாட்டேன்” என்று சொல்லி அனைவரையும் அரிவாள் மற்றும் உருட்டுக் கட்டைகளால் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பினர்.

இதுகுறித்து தகவலறிந்த கீழப்பழுவூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயமடைந்த 5 பேரையும் சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, தாக்குதலில் ஈடுபட்ட விக்னேஸ்வரன், முரளிகிருஷ்ணன், முருகராஜ், இவர்களின் நண்பர்கள் ஆகியோரை கைது செய்து, அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதில் தப்பி ஓடிய பெண்ணின் தந்தை முருகானந்தத்தை போலீஸார் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.-Source: vikatan

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!