இன்று மஹா சங்கடஹர சதுர்த்தி – சாகும் வரை சுமங்கலியாக வாழும் பாக்கியம் கிடைக்கும்..!


பௌர்ணமிக்கு அடுத்து வரும் நான்காவது நாள் சங்கடஹர சதுர்த்தி என்று அழைக்கப்படுகிறது. அதிலும், ஆண்டின் ஆவணி மற்றும் மாசி மாத காலத்தில் பௌர்ணமிக்கு அடுத்து வரும் சதுர்த்தியே மஹா சங்கடஹர சதுர்த்தியாகும்.

பிப்ரவரி 22; மாசி மாத சங்கடஹர சதுர்த்தி தினமாகும். சங்கடங்கள் அனைத்தும் தீர்க்கும் விநாயகரை வணங்கி மஞ்சள் கயிற்றை இன்று மாற்றினால் காலம் முழுவதும் சுமங்கலியாக வாழும் பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

மாசிக் கயிறு பாசியேறும் வரை நிலைக்கும்’, `மாசிக் கயிறு பாசி படியும்’ என்பது கிராமங்களில் கூறப்படும் பழமொழிகளாகும். அதாவது மாசி மாதம் விரதமிருந்து, மாற்றிக்கொள்ளும் மஞ்சள் கயிறானது, பாசி படரும் வரை கழுத்தில் நிலைத்திருக்கும் என்று இதற்கு அர்த்தம்.


மாசி மாத சங்கடஹர சதுர்த்தியின் போது விரதமிருந்து மஞ்சள் கயிறு மாற்றும் பழக்கம் தொன்று தொட்டு இருந்து வருகிறது. மாசி சங்கடஹர சதுர்த்தியன்று மாலை நேரத்தில் 4.30 மணி முதல் 5.30 மணிக்குள் மஞ்சள் கயிறு மாற்றுவதற்கு உகந்த நேரமாகும்.

சங்கடஹர என்றால் துன்பங்களை அழித்தல் என்று பொருளாகும். சங்கடஹர சதுர்த்தி தினத்தில் விரதமிருந்து வழிபட்டால் துன்பங்கள் அனைத்தும் விலகிவிடும். அதுவும் மாசி மாதத்தில் வரும் சங்கடஹர சதுர்த்தியன்று இருக்கும் விரதம் துன்பங்கள் அனைத்தையும் போக்கும் வல்லமை உடையது.

அதனால், இன்று விரதமிருந்து மஞ்சள் கயிற்றை மாற்றி காலம் முழுவதும் சுமங்கலியாக வாழும் வரத்தைப் பெறலாம். விரதமிருந்து விநாயகரை வழிபட்டால் சங்கடங்கள் அனைத்தும் விலகிவிடும்.-Source: vikatan

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!