3½ அடி நீளம் உள்ள பாம்புடன் மருத்துவமனை வந்த முதியவர் – ஓட்டம் பிடித்த நோயாளிகள்..!


விருத்தாசலத்தை அடுத்த சின்னகண்டியாங்குப்பத்தை சேர்ந்தவர் ரங்கநாதன்(வயது 87). விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு, ஒரு பிளாஸ்டிக் பையில் சுமார் 3½ அடி நீளம் உள்ள பாம்பு ஒன்றை வைத்து எடுத்து வந்தார். அப்போது அங்கு சிகிச்சைக்காக வந்திருந்த நோயாளிகள் சிலர் மற்றும் செவிலியர்கள் உள்பட அனைவரும் பாம்பை பார்த்தவுடன் ஓட்டம் பிடித்தனர்.

தொடர்ந்து அங்கிருந்த டாக்டர்கள், ரங்கநாதனிடம் விசாரித்தனர். அப்போது அவர், தன்னை அந்த பாம்பு கடித்துவிட்டதாகவும், உடனடியாக தனக்கு சிகிச்சை அளிக்குமாறு தெரிவித்தார். இதையடுத்து அவரை கடித்த பாம்பு எந்த வகையை சேர்ந்தது என்பதை அறிந்து, டாக்டர்கள் அதற்கு தகுந்த வகையில் சிகிச்சை அளித்தனர்.

இதுபற்றி விசாரித்த போது, ரங்கநாதன் தனக்கு சொந்தமாக சின்னகண்டியாங்குப்பம் பகுதியில் உள்ள விளை நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அவரை, பாம்பு கடித்துள்ளது. இதையடுத்து அந்த பாம்பை பிடித்து, ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு மருத்துவமனைக்கு எடுத்து வந்தது தெரியவந்தது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரங்கநாதன் தற்போது நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். மேலும் அவர் பிடித்து வந்த பாம்பு அருகில் உள்ள காப்பு காட்டில் பத்திரமாக விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்று சொல்வார்கள், ஆனால் முதியவர் ஒருவர் தன்னை கடித்த பாம்பை துணிச்சலாக பிடித்து, அதை மருத்துவமனைக்கு கொண்டு வந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!