டாக்காவிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து – 69 பேர் உடல் கருகி பலி..!


வங்கதேச தலைநகர் டாக்காவின் பழமையான இடங்களில் ஒன்று சாவ்க்பஜார். இந்த பகுதியில் உள்ள மிகப் பழமையான அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அடுக்குமாடி குடியிருப்பின் ஒரு பகுதி ரசாயனப் பொருட்களை சேமித்து வைக்கும் குடோனாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இந்த குடோனில் பிடித்த தீ, பின்னர் மளமளவென பரவியது.


இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சுமார் 200 பேர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்து சாதாரணமாக மற்ற இடங்களில் நடைபெறும் விபத்து போன்றது இல்லை. எளிதில் தீப்பற்றக்கூடிய ரசாயனப்பொருட்கள் இருந்ததால், அவை வேகமாக பரவியது. எனவே, தீயை அணைப்பதற்கு நீண்ட நேரம் ஆனது.


இந்த தீ விபத்தில் சிக்கி 69 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 40க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வரும் நிலையில், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

ரசாயன குடோனில் உள்ள கேஸ் சிலிண்டரில் தீ பற்றி, இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன.

இதேபோல் கடந்த 2010 ஆம் ஆண்டு டாக்காவில் ரசாயன குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 120 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!