ஸ்டைலா, கலரா, சூப்பரா இருக்கு.. கையில் செருப்புடன் அமைச்சருக்கு நன்றி சொன்ன மாணவன்!


“இந்த வருஷ செருப்பு ரொம்ப ஸ்டைலா, கலரா, சூப்பரா இருக்கு” என்று செருப்பை கையில் வைத்துக் கொண்டு அமைச்சருக்கு நன்றி தெரிவித்த மாணவனின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

அரசு பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்கிய விலையில்லா காலணி உள்ளிட்டவற்றை வழங்கி வருகிறது. இந்த காலணியை பெற்றுக் கொண்ட மாணவன் ஒருவன் வீடியோ வெளியிட்டுள்ளான்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுக்கா கூலிப்பாக்கம் அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவன் ஜஸ்டின் தாமஸ்தான் அவன்.

வீடியோவில் அவன் பேசும்போது தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனுக்கு நன்றி தெரிவித்துள்ளான். முடிந்தவரை ஆங்கிலம் கலக்காமல் முயற்சி செய்து மாணவன் இந்த வீடியோவில் பேசியிருப்பது கொள்ளை அழகு. அதில் மாணவன் தெரிவித்துள்ளதாவது

“கிளாஸ்க்கு வந்தவுடனேயே இந்த வருஷம் செருப்பு தரப்போறதா சொன்னாங்க. ஆனா வழக்கம்போல இருக்கும்னுதான் நினைச்சோம். இதை எடுத்து காட்ட உடனேயே நாங்க ரொம்ப சந்தோஷப்பட்டோம். இதுக்கு முன்னாடி தந்த காலணியெல்லாம் கடினமா இருக்கும். போடவே முடியாது.

அதை நாங்க வாங்கிட்டு போய் செருப்பு இல்லாதவங்களுக்கோ இல்லாட்டி முள் செடி வெட்றவங்களுக்கோ குடுத்துடுவோம். இந்த வருஷம் செருப்பு ரொம்ப ஸ்டைலா, கலரா, சூப்பரா தந்திருக்காங்க. இதை நான் வீட்டுக்கு போட்டுட்டு வந்தேன். இதை பார்த்துட்டு எங்க அப்பா இது ஏதுடா புது செருப்பு, யாருடா வாங்கி தந்ததுன்னு கேட்டார். நான் உடனே ஸ்கூல்ல தந்ததுப்பான்னு சொன்னேன். ஆச்சரியப்பட்டார்.

எங்க ஏரியாவில நிறைய இங்கிலீஷ் மீடியம் ஸ்கூல் இருக்குது. இருந்தாலும் இன்னைக்கு நாங்களும் அவங்க அளவுக்கு எல்லாமே படிக்க ஆரம்பிச்சிட்டோம். செங்கோட்டையன் ஐயா புது புது திட்டங்களை கவர்ன்மென்ட் ஸ்கூலில் கொண்டு வந்திட்டு இருக்கிறார். பள்ளிக்கல்வித்துறையை சிறப்பாக செய்து வருகிறார்.

எங்களுக்கு யூனிபார்மும் தர்றாங்க. அது நல்லாதான் இருக்கு. ஆனா செகண்ட் கிளாஸ் மாதிரி தெரியுது. ஃபர்ஸ்ட் கிளாஸ் தரத்தோட அந்த யூனிமார்மும் கிடைச்சா ரொம்ப நல்லாயிருக்கும். நாங்க எல்லாருமே அப்படித்தான் எதிர்பார்க்கிறோம்.-Source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!