இப்படியான எண்ணம் கொண்டவர்களை சாய்பாபா தன் அருகில் சேர்த்துக் கொள்ளாமல் விரட்டினார்..!

சீரடிக்கு செல்லும் லட்சோப லட்ச உண்மையான சாய் பக்தர்களுக்கு பாபா கூறிய இந்த மணிமொழியின் மகத்துவம் புரியும். பாபா அதிகம் பேச மாட்டார். தேவைப்பட்டால் மட்டுமே தன் கருத்துக்களை பக்தர்களிடம் வெளியிடுவார். அப்போது அவர் தெரிவிக்கும் கருத்துக்கள் ஆழ்ந்து யோசிக்கும் வகையில் தத்துவங்கள் கொண்டதாக இருக்கும்.

“உண்மையாக இருங்கள். நியாயமாக இருங்கள். அமைதியாக இருங்கள். உங்களுக்குத் தேவையானதை நான் செய்கிறேன். உங்கள் நோக்கத்தையும், விருப்பத்தையும் நிறைவேற்றுவேன்” என்று பாபா அடிக்கடி சொன்னதுண்டு. ஆனால் இதை புரிந்து கொள்ளாமல் சிலர் ஆணவ மனப்பான்மையுடன் துவாரகமாயி மசூதிக்குள் நுழைய முயன்றனர். அத்தகைய எண்ணம் கொண்டவர்களை சாய்பாபா தன் அருகில் சேர்த்துக் கொள்ளாமல் விரட்டினார்.

பாபா வாழ்வில் பல தடவை பலர் அப்படி விரட்டப்பட்டுள்ளனர். அவர்களில் ஹாஜி சித்திக் பால்கே என்பவரும் ஒருவர். கல்யாண் எனும் ஊரைச் சேர்ந்த அவர் குர்ஆனில் ஆழ்ந்த புலமைப் பெற்றவர். இஸ்லாமிய கோட்பாடுகளை தவறாமல் கடைபிடித்தார். அவர் இஸ்லாமியர்களின் முக்கிய கடமைகளில் ஒன்றான மெக்காவுக்கு புனித யாத்திரை சென்று வந்திருந்தார். இது அவரை தற்பெருமை செய்து கொள்ளச் செய்திருந்தது.

சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு மெக்கா புனித பயணம் மிகவும் கடுமையானதாக இருந்தது. கப்பல் மூலம் மட்டுமே மெக்கா யாத்திரை நடந்தது.
மெக்கா யாத்திரை கடமையை செய்து முடிப்பது பெரும் சாதனையாகவே கருதப்பட்டது. அந்த யாத்திரையை முடித் திருந்ததால் ஹாஜி சித்திக் பால்கேக்கு அவரையும் அறியாமல் ஆணவம் ஏற்பட்டு இருந்தது.

ஆனால் அந்த ஆணவம் சீரடி மண்ணில் எடுபடாமல் போய் விட்டது. ஒரு தடவை அவர் சாய்பாபாவை நேரில் தரிசனம் செய்து ஆசி பெற வேண்டும் என்ற ஆசையுடன் சீரடிக்கு வந்திருந்தார். பூ, பழம், இனிப்புகள் வாங்கிக் கொண்டு மிகவும் மகிழ்ச்சியுடன் துவாரகமாயி மசூதிக்குள் காலடி எடுத்து வைத்தார்.
அப்போது சாய்பாபாவின் கர்ஜனை குரல் கம்பீரமாக வெளிப்பட்டது. “உள்ளே வராதே…. உனக்கு இங்கு இடம் இல்லை. வெளியே போ” என்று சாய்பாபா உத்தரவிட்டார்.

இதைக் கேட்டதும் ஹாஜி சித்திக் பால்கே மின்சாரம் தாக்கியது போன்று அதிர்ச்சி அடைந்தார். கூனிக்குறுகி மன வேதனையுடன் துவாரகமாயிக்குள் செல்லாமல் வெளியேறினார். மசூதிக்கு எதிரே திறந்த வெளியில் போய் நின்ற அவருக்குள் அடுத்தடுத்து கேள்விகள் எழுந்தன. “நாம் என்ன தவறு செய்தோம்? நம்மை ஏன் சந்திக்காமல் பாபா விரட்டி விடுகிறார்?” என்று யோசித்தார்.

அவருக்கு எதுவும் புரியவில்லை. சாய்பாபாவிடம் நேரில் ஆசீர்வாதம் பெறாதது அவருக்குள் மிகுந்த ஏமாற்றத்தைக் கொடுத்தது. பாபாவிடம் ஆசி பெறாமல் ஊர் திரும்பக் கூடாது என்று அவர் மனம் கூறியது. அது பிடிவாதமாக மாறியது. மசூதி எதிரிலேயே வெளியில் வெட்ட வெளியில் பாபாவை எதிர்பார்த்து நின்றார்.
ஒரு நாள் அல்ல, ஒரு வாரம் அல்ல, ஒரு மாதம் அல்ல…. 9 மாதங்கள் அவர் பாபா தரிசனத்துக்காக வெட்ட வெளியிலேயே இருந்தார்.

ஆனால் சாய்பாபா அவரை கண்டு கொள்ளவே இல்லை. ஒருநாள் கூட அழைத்துப் பேசவில்லை. நாளடைவில் ஹாஜி சித்திக் பால்கே மனம் மிகவும் வேதனைப்பட்டது. அப்போது வழிபோக்கர் ஒருவர் அங்கு வந்தார். ஹாஜி சித்திக் பால்கேயிடம் என்ன நடந்தது என்பதை கேட்டு அறிந்தார். அவர் சித்திக்கிடம் ஒரு யோசனை தெரிவித்தார்.

“சிவபெருமானை தரிசனம் செய்ய நாம் நந்தியிடம் அனுமதி பெறுகிறோம் அல்லவா? அது போல பாபாவை தரிசிக்க அவருக்கு நெருக்கமானவர்கள் மூலம் முயற்சி செய்யுங்கள்” என்றார். வழி போக்கர் சொன்ன யோசனை ஹாஜி சித்திக் பால்கேக்கு மிகவும் சரியெனப்பட்டது. உடனே அவர் பாபாவின் நெருங்கியவர்களில் ஒருவரான ஷாமாவை அணுகினார்.

தன்னை பாபா விரட்டி விட்டது பற்றி கண்ணீருடன் கூறினார். அவரை ஆறுதல் படுத்திய ஷாமா தக்க சமயத்தில் உதவி செய்வதாக கூறினார். ஒருநாள் பாபாவிடம் பேசிக் கொண்டிருந்த ஷாமா, இந்த விவகாரம் பற்றி பேசினார். “மசூதி எதிரில் ஒருவர் உங்களைப் பார்ப்பதற்காக மாதக் கணக்கில் உட்கார்ந்து கொண்டிருக்கிறாரே அவருக்கு ஏன் ஆசி கொடுக்க மறுக்கிறீர்கள்?” என்று கேட்டார்.

அதற்கு பாபா, “அவருக்கு ஆசி வழங்க எனக்கு கடவுள் அனுமதி தரவில்லை. பிறகு நான் எப்படி அவரை ஆசீர்வதிக்க முடியும்?” என்றார். ஷாமா விடவில்லை. “அந்த முதியவரை ஏன் இப்படி சோதிக்கிறீர்கள். ஒரே ஒரு தடவை ஆசீர்வதிக்கக் கூடாதா,” என்று கெஞ்சும் குரலில் கேட்டார்.

இதைக் கேட்டதும் பாபா மனம் இரக்கப்பட்டது. சற்று யோசித்த அவர், ஷாமாவை நோக்கி, “எனக்கு அவர் 40 ஆயிரம் ரூபாயை தட்சணையாகத் தர வேண்டும். இந்தத் தொகையை 4 தவணைகளாக அவர் தர வேண்டும். அவரால் தட்சணை தர முடியுமா? என்று கேட்டு விட்டு வா” என்றார். உடனே ஷாமா வெளியில் வந்து சித்திக்கை சந்தித்து பேசினார். பாபா சொன்ன தொகையை கொடுக்க முடியுமா? என்று கேட்டார்.

அதற்கு சித்திக், “40 ஆயிரம் ரூபாயை 4 தவணைகளாகக் கொடுக்கிறேன்” என்று சம்மதித்தார். இதை மசூதிக்குள் வந்து பாபாவிடம் ஷாமா கூறினார்.
உடனே பாபா மற்றொரு நிபந்தனை விதித்தார். “நாங்கள் மசூதிக்குள் ஒரு பெரிய ஆட்டை வெட்டப் போகிறோம். அந்த ஆட்டின் மாமிசத்தில் தொடைப் பகுதி மாமிசம் மற்றும் இடுப்பு எலும்பு இவற்றில் எது வேண்டும் என்று கேட்டு விட்டு வா” என்று உத்தரவிட்டார்.

ஷாமா மீண்டும் ஹாஜி சித்திக் பால்கேவிடம் வந்து “மாமிசத்தில் எந்த பகுதி வேண்டும்?” என்று கேட்டார். அதற்கு சித்திக், “எனக்கு எந்த மாமிசமும் வேண்டாம். பாபா உணவருந்தும் மண் சட்டியில் இருந்து ஒரே ஒரு சோற்றுப் பருக்கை அவர் ஆசீர்வாதத்துடன் எனக்குத் தந்தால் போதும்” என்றார்.

சித்திக் சொன்ன இந்த பதிலை ஷாமா அப்படியே சாய்பாபாவிடம் தெரிவித்தார். அதைக் கேட்டதும் பாபா மிகவும் மனம் நெகிழ்ந்தார். மசூதியில் இருந்து எழுந்து வெளியில் வந்த அவர், எதிரில் வெட்ட வெளியில் அமர்ந்திருந்த ஹாஜி சித்திக் பால்கேயிடம் சென்றார். பாபாவை அருகில் கண்டதும் சித்திக் முகம் மலர்ந்தது. மகிழ்ச்சியோடு எழுந்து அவர் கைக் கூப்பி வணங்கி நின்றார்.

அவரது கையைப் பிடித்துக் கொண்ட பாபா, “இவ்வளவு இளகிய மனம் கொண்ட நீ ஏன் தற்பெருமையும் ஆணவமும் கொண்டிருக்கிறாய்? மெக்கா புனித யாத்திரை மேற்கொண்டதால் உனக்கு மிகவும் கர்வம் வந்து விட்டது அல்லவா?” என்றார். ஹாஜி சித்திக்கை மிகவும் உயர்ந்த குரலில் பாபா சத்தமிட்டு கண்டித்தார். தற்பெருமையையும் இன்றே விட்டு விடும்படி கேட்டுக்கொண்டார். அதன் பிறகே தனது தற்பெருமையே தனக்கு எதிரியாக இருந்ததை ஹாஜி சித்திக் உணர்ந்தார். குற்ற உணர்வில் தலைகுனிந்து நின்றார்.

அவர் கண்களில் இருந்து தாரை, தாரையாக கண்ணீர் பெருக்கெடுத்தது. “பாபா என்னை மன்னித்து விடுங்கள்” என்று கதறியபடி பாபா காலில் விழுந்து அழுதார்.
அவரைத் தூக்கிய பாபா, ஹாஜி சித்திக்கின் கண்ணீரைத் துடைத்து விட்டார். பிறகு ஹாஜி சித்திக்கை துவாரகமாயி மசூதிக்குள் பாபா அழைத்துச்சென்றார்.
ஒரு கூடை நிறைய மாம்பழங்களை எடுத்து வந்து கொடுத்தார். பிறகு தனது பையில் இருந்து 55 ரூபாயை எடுத்துக்கொடுத்தார்.

அது மட்டுமின்றி ஹாஜி சித்திக்கை மசூதிக்குள் உட்கார வைத்து உணவும் கொடுத்தார். கண்ணீர் மல்க சாப்பிட்டு முடித்த சித்திக் பிறகு பாபாவிடம் அனுமதி பெற்று சீரடியில் இருந்து புறப்பட்டு சென்றார்.

சிலர் தங்களது குலப்பெருமை பற்றியும், சிலர் தங்களது வேத ஞானம் பற்றியும், சிலர் தங்களது சொத்துக்கள் பற்றியும், சிலர் தங்களது அரசு உயர் பதவி பற்றியும் தற்பெருமையும் ஆணவமும் கொண்டு துவாரகமாயி மசூதிக்குள் வருவதுண்டு. அவர்களை பாபா தன் அருகில் சோத்துக்கொண்டதே இல்லை. இப்படி பக்தர்களின் மனநோய் மட்டுமின்றி உடல் ரீதியிலான நோய்களையும் பாபா உடனுக்குடன் தீர்த்து வைத்து நிறைய அற்புதங்கள் செய்துள்ளார். – Source: maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.