ஒரே நம்பரிலிருந்து போன் அழைப்பு… சந்தியா கொலையில் மறைக்கப்பட்ட உண்மைகள்..!


சென்னை பெருங்குடி குப்பைக் கிடங்கில் சந்தியாவின் உடல்பாகங்களை போலீஸார் இன்று தேடிவரும் நேரத்தில் கொலையில் முக்கிய தடயங்கள் மறைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை பெருங்குடி குப்பைக் கிடங்கில் கடந்த 21-ம் தேதி இரண்டு கால்கள், ஒரு கை கண்டெடுக்கப்பட்டன. பள்ளிக்கரணை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆல்பின்ராஜ் தலைமையிலான தனிப்படை போலீஸாரும் துணை கமிஷனர் முத்துசாமி மேற்பார்வையிலான ஸ்பெஷல் டீமும் நீண்ட நெடிய விசாரணைக்குப்பிறகு வழக்கில் துப்பு துலங்கியுள்ளனர்.

சினிமா தயாரிப்பாளரும் இயக்குநருமான பாலகிருஷ்ணன், தன்னுடைய மனைவி சந்தியாவை கொலை செய்து உடலை துண்டுதுண்டாக வெட்டி குப்பைத்தொட்டிகளிலும் அடையாற்றிலும் வீசியது தெரியவந்தது. இந்த வழக்கில் பாலகிருஷ்ணன் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சந்தியாவின் துண்டிக்கப்பட்ட தலை, இடுப்பின் மேல்பகுதியை போலீஸார் தேடிவருகின்றனர். இதற்காக பள்ளிக்கரணை போலீஸாரும் சென்னை மாநகராட்சி ஊழியர்களும் பெருங்குடி குப்பை கிடங்கில் இன்று காலை முதல் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 20-ம் தேதி வள்ளுவர் கோட்டம் பகுதியிலிருந்து கொண்டு வரப்பட்ட குப்பையைக் கிளறி உடல்பாகங்களைத் தேடினர். ஆனால், இதுவரை எந்த உடல்பாகங்களும் கிடைக்கவில்லை.

நாகர்கோவிலிருந்து சென்னை வந்த சந்தியாவின் குடும்பத்தினர், கவலையுடன் காத்திருக்கின்றனர். உடல் பாகங்கள் முழுமையாக கிடைத்தால் மட்டுமே அதை டி.என்.ஏ சோதனைக்குப்பிறகு அவரின் உறவினர்களிடம் ஒப்படைக்க முடியும். இதனால் உடல் பாகங்களைத் தேடும் பணியை போலீஸார் முடுக்கிவிட்டுள்ளனர்.


சிறையில் அடைக்கப்பட்ட பாலகிருஷ்ணனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீஸார் திட்டமிட்டுள்ளனர். அதுதொடர்பாக போலீஸ் உயரதிகாரிகள் ஆலோசனை நடத்திவருகின்றனர். ஏனெனில் இந்தக்கொலையில் இன்னும் சில மர்மங்கள் இருப்பதாக போலீஸார் சந்தேகிக்கின்றனர். அதுதொடர்பாக பாலகிருஷ்ணனிடம் விசாரணை நடத்தினால் கூடுதல் தகவல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தனிப்படை போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்தான் சந்தியாவை அடையாளம் காணமுடிந்ததாக போலீஸார் கூறியுள்ளனர். அதோடு மனைவி மீது பாலகிருஷ்ணனுக்கு ஏற்பட்ட சந்தேகத்தால் இந்தக் கொலை நடந்ததாகவும் போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால், அதையும் தாண்டி இன்னும் சில உண்மைகள் உள்ளன.

அதாவது சந்தியாவின் செல்போன் கால் ஹிஸ்ட்ரிகளை போலீஸார் ஆய்வு செய்தபோது ஜனவரி மாதத்தில் மட்டும் அவரிடம் பேசியவர்களின் விவரங்களை சைபர் கிரைம் போலீஸார் சேகரித்து விசாரித்தபோது குறிப்பிட்ட சில நம்பர்களிலிருந்து சந்தியாவுக்கு அடிக்கடி போன் அழைப்பு வந்துள்ளது. அதுவும் இரவு நேரங்களில்தான் அந்த நம்பரிலிருந்து அழைப்பு வந்துள்ளது. அதுகுறித்து விசாரணை நடந்துவரும் நேரத்தில் பாலகிருஷ்ணனுக்கும் சந்தியாவுக்கும் இடையே தகராறு ஏற்பட முக்கிய காரணம் என்ன என்பதுதான் இந்த வழக்கில் முக்கிய கேள்வியாக உள்ளது.


ஆத்திரத்தில் மனைவி கொலை செய்தாலும் ஏன் உடலை கூறுபோட வேண்டும் என்பதற்கான தெளிவான பதில் இதுவரை போலீஸாருக்கு கிடைக்கவில்லை. சந்தியாவின் சடலத்தை மறைப்பதற்காக உடலை துண்டுதுண்டாக வெட்டியதாக பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். ஆனால், அதை போலீஸார் ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும், சந்தியாவின் அம்மா பிரசன்னா இந்தக் கொலையில் இன்னும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகத்தைக் கிளப்பியுள்ளார். இதனால்தான் பாலகிருஷ்ணனிடம் மீண்டும் விசாரணை நடத்தவேண்டிய சூழலுக்கு போலீஸார் தள்ளப்பட்டுள்ளனர்.

மனைவியை கொலை செய்தபிறகும் போலீஸ் விசாரணையின்போது பாலகிருஷ்ணன் தைரியமாகவே இருந்துள்ளார். மனைவியைக் கொலை செய்தது குறித்த தகவலைச் சொல்லும்போதுகூட அவரிடமிருந்து எந்தவித குற்ற உணர்வும் தென்படவில்லை என்கின்றனர் போலீஸார். பாலகிருஷ்ணனின் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்தபோது இன்னொரு தகவல் போலீஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சந்தியா, பாலகிருஷ்ணன் என இருவருக்கும் ஒரே நம்பரிலிருந்து போன் அழைப்பு வந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அதை போலீஸார் உறுதிப்படுத்தவில்லை. இருப்பினும் இருவரின் போன் கால் ஹிஸ்ட்ரிகள் இந்த வழக்கின் அடுத்த திருப்பத்தை ஏற்படுத்த காத்திருக்கிறது.-Source: vikatan

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!