பொறுமை, நம்பிக்கையே பக்தர்களிடம் சாய் கேட்கும் தட்சணை..!


இந்தப் புண்ணிய பூமியில்தான் எத்தனை எத்தனை மகான்கள் அவதரித்திருக்கிறார்கள்! அப்படி, மகான்கள் பலர் தோன்றிய நம் நாட்டில், 19-ம் நூற்றாண்டில், மகாராஷ்டிர மாநிலம் ஷீர்டியில் தோன்றிய மகான் ஸ்ரீ சாயிபாபா. பெற்றவர் யார் என்றும், பிறப்பிடம் எதுவென்றும் தெரியாதபடி, அமைதியான அந்த ஷீர்டி கிராமத்தின் எல்லையில் இருந்த வேப்ப மரத்தின் அடியில், நிஷ்டையில் அமர்ந்திருந்த கோலத்தில்தான், ஷீர்டி மக்கள் அவரை முதன் முதலாகக் கண்டனர்.

அவர் ஒரு பெரும் சித்தபுருஷர் என்பதோ, அவரால் அந்த ஷீர்டி கிராமமே புனிதத் தலமாக திகழப்போகிறது என்பதோ, அப்போது அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. ஒருசில தினங்களிலேயே அதைப் புரிந்துகொண்ட ஷீர்டி மக்களுக்கு, அவரிடம் குறையாத அன்பும், மாறாத பக்தியும் ஏற்பட்டுவிட்டது.
சாயிபாபா, ஷீர்டி மக்களின் குறைகளை எல்லாம் தீர்க்கும் குருவாகவும், அவர்களுடைய தேவைகளை நிறைவேற்றும் கற்பகவிருட்சமாகவும் திகழ்ந்தார். பல மாதங்கள் வரை அவர் அந்த வேப்பமரத்தின் அடியில்தான் அமர்ந்திருந்தார்.

ஒருநாள், இரவு பெருமழை பெய்தது. ஊரெங்கும் வெள்ளம்! இருந்தும்கூட, பாபா தாம் அமர்ந்திருந்த இடத்தைவிட்டு அங்கே இங்கே ஒரு இம்மிகூட நகரவே இல்லை. பொழுது விடிந்தது; மழையும் ஓய்ந்தது. அப்போதுதான் ஷீர்டி மக்களுக்கு பாபாவின் நினைவு வந்தது.


தங்களின் குறைகளையெல்லாம் தீர்த்து அருள்புரிந்த அந்த மகானை, இரவெல்லாம் மழையில் தவிக்கும்படியாக விட்டுவிட்டோமே என்று தங்களையே கடிந்து கொண்டவர்களாக, பாபா அமர்ந்திருந்த இடத்துக்குச் சென்றனர். நிச்சலனமான நிலையில் தியானத்தில் இருந்த பாபா, சற்றுப் பொறுத்து கண்விழித்தார். பெருமழையில் இரவெல்லாம் பாபா தவிக்கும்படியாக விட்டுவிட்ட தங்களின் செயலுக்கு வருத்தம் தெரிவித்த மக்கள், அவரை ஊருக்குள் வந்து தங்கும்படி கேட்டுக்கொண்டனர்.

அவர்களின் கோரிக்கைக்கு முதலில் மறுப்பு தெரிவித்த பாபா, அவர்கள் தொடர்ந்து வற்புறுத்தவே, ஊருக்குள் இருந்த ஒரு பழைய கட்டடத்தில் வந்து தங்கினார். அதுவே துவாரகாமயி. 1918-ம் ஆண்டு வரை அங்கிருந்தபடியே எண்ணற்ற அதிசயங்களை நிகழ்த்தி, பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள் புரிந்தார் பாபா. பக்தர்களிடம் அவர் கேட்கும் தட்சணை பொறுமை மற்றும் நம்பிக்கை ஆகியவைதான்.

பக்தர்கள் பலர் ஏராளமான செல்வத்தை அவர் காலடியில் கொண்டு வந்து குவித்தும்கூட, தமக்கென எதுவுமே வைத்துக்கொள்ளாமல், கடைசி வரை ஒரு பக்கிரியாகவே வாழ்ந்து சமாதி ஆன ஸ்ரீசாயி, தமக்குப் பின்னால் ஒரு சீடரைக்கூட வைத்துக்கொள்ளவில்லை. ‘என்னுடைய சமாதிக்குள் இருந்தும் நான் பக்தர்களைக் காப்பாற்றி அருள்புரிவேன்’ என்பதுதான் அவருடைய அருள்மொழி. அப்படியே இன்றளவும் நடைபெற்று வருவதை நம்மால் நிதர்சனமாகக் காணமுடிகிறது.-Source: dinakaran

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!