வெடிச் சத்தம் கேட்டு திருமணத்தை நிறுத்திய மணப்பெண்… நடந்தது என்ன?


வடமாநிலங்களில் திருமண விழாக்களில் மகிழ்ச்சியை வெளிப்படுத்த வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுடும் பழக்கம் வாடிக்கையாக உள்ளது.

இதில் தவறுதலாக குண்டு பாய்ந்து விபரீத சம்பவங்கள் நடப்பதால் துப்பாக்கியால் சுடுவதற்கு வட மாநில அரசுகள் தடை விதித்துள்ளன. ஆனால் துப்பாக்கியால் சுடும் பழக்கம் தொடர்ந்தே வருகிறது.

இந்த நிலையில் மத்திய பிரதேசத்தில் ஊர்வலத்தில் துப்பாக்கியால் சுட்டத்தால் திருமணத்தை மணப்பெண் நிறுத்தியுள்ளார். குவாலியர் நகரில் உள்ள நிமிபோஷியைச் சேர்ந்தவர் கல்யாண்சிங்.

இவரது மகள் பிங்கி. இவருக்கும், கோலேகா மந்திரி பகுதியைச் சேர்ந்த கி‌ஷண் பரிவாலுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இரவு மாப்பிள்ளை ஊர்வலம் நடந்தபோது மணமகன் அழைப்பில் நடனமாடி சென்றனர்.

அப்போது மகிழ்ச்சி ஆரவாரத்தில் மாப்பிள்ளை மற்றும் உறவினர்கள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். சத்தம் கேட்டு திருமண மண்டபத்தில் இருந்து வெளியே வந்த மணப்பெண் பிங்கி, துப்பாக்கியால் சுடுவதை நிறுத்துமாறு கேட்டு கொண்டார்.

இது சட்ட விரோத செயல் என்று கூறினார். ஆனால் அதை மாப்பிள்ளை குடும்பத்தினர் கண்டு கொள்ளாமல் துப்பாக்கியால் சுட்டனர். அதனால் ஆவேசமடைந்த பிங்கி, தனக்கு இந்த மாப்பிள்ளை வேண்டாம்.

திருமணத்தை உடனே நிறுத்துங்கள் என்று தந்தையிடம் கூறினார். இதனால் திருமணம் நின்றது. இதையடுத்து இரு வீட்டாருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசார் அங்கு வந்து சமாதானப்படுத்தினர். பின்னர் இருதரப்பிலும் புகாரை பெற்று வழக்குப்பதிவு செய்தனர். – Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!