பெண் புலியை கொன்று தின்ற ஆண் புலி.. அதிர்ச்சியில் உறைந்த வன அலுவலர்கள்..!


மத்தியப் பிரதேசத்தில் பெண் புலியை, ஒரு ஆண் புலி அடித்துக் கொன்று தின்றிருப்பதாக வன அலுவலர்கள் தெரிவித்துள்ள சம்பவம் இயற்கை ஆர்வலர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இந்தியாவிலேயே அதிகளவிலான புலிகள் மத்தியப் பிரதேசத்தில் உள்ள கன்ஹா தேசியப் பூங்காவில் வசித்து வருகின்றன. இங்கு நடைபெற்ற ஒரு விநோத சம்பவம் வன அலுவலர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்களை அதிர்ச்சியடைச் செய்துள்ளது.

பூங்கா பகுதிக்குள் வன காவலர்கள் ரோந்து பணியினை மேற்கொண்ட போது, ஒரு இடத்தில் புலியின் எலும்புகள் ரத்தக் கறையுடன் சிதறிக்கிடந்துள்ளதை கண்டனர். அதிர்ச்சி அடைந்த அவர்கள். உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த உயரதிகாரிகள், கொல்லப்பட்டது பெண் புலி என்றும், அதை காட்டில் வசிக்கும் ஆண் புலி ஒன்று கொன்று தின்றுள்ளது என்றும் கண்டறிந்தனர். இது விநோத சம்பவம் அலுவலர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது.

இது குறித்து தேசிய பூங்கா இயக்குநர் கிருஷ்ண்மூர்த்தி கூறுகையில், ஒரு புலி மற்றொரு புலியை அடித்துக்கொன்று சாப்பிடுவது அபூர்வ சம்பவமாகும். இத்தகைய சம்பவம் இதுவரை நடந்தது இல்லை.

மேலும், பெண் புலியை கொன்று தின்ற ஆண் புலிக்கு போதிய உணவுகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனாலும் ஆண் புலி, பெண் புலியை கொன்று தின்றுள்ளது. இது மிகவும் விநோதமாக உள்ளதால் அதற்கான காரணங்களை கண்டறிய ஆய்வு மேற்கொள்ளப்படும்.

சில சமயங்களில் தனது குட்டியை புலிகள் தின்ற சம்பவம் நடந்தது உண்டு. ஆனால் ஒரு பெரிய புலியை மற்றொரு புலி அடித்து கொன்று தின்ற சம்பவம் நடந்தது இல்லை. கொல்லப்பட்ட பெண் புலியின் எஞ்சிய உடல் பாகங்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

உலகளவில் புலியின் வாழ்வாதாரத்தை வைத்து இதுவரை சேகரிக்கப்பட்ட புள்ளி விவரங்களின் படி இப்படியொரு சம்பவம் நடந்ததே இல்லை. இது முற்றிலும் விநோதமாக உள்ளது என்று வனவிலங்கு ஆர்வலர்கள் தெரிவித்து உள்ளனர். இந்தியாவிலேயே அதிகளவில் புலி வசிக்கும் மாநிலமாக மத்தியப் பிரதேசம் உள்ளது. அதை சிறப்பிக்கும் வகையில், 1995ம் ஆண்டில் மத்தியப் பிரதேசம் புலிகள் மாநிலமாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.-Source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!