ஜாதகத்திலுள்ள 12 லக்னத்திற்கான கடன் தீர்க்கும் பரிகாரங்கள்..!


ஒருவரது ஜாதகத்தில் லக்னத்துக்கு 6-க்கு உடையவன் வலுப்பெற்று இருந்தால், அந்த ஜாதகருக்குப் பொருளாதார ரீதியாக பெருத்த கடன்களை உண்டாக்கும். ஒவ்வொரு லக்னத்தைச் சேர்ந்தவர்களும் உரிய பரிகாரம் மூலம் கடன்களில் இருந்து விடுபடலாம்.

லக்னத்திலிருந்து 6-ம் இடம் என்பது ருண – ரோக – சத்ருஸ்தானம் ஆகும். ஒருவரது ஜாதகத்தில் லக்னத்துக்கு 6-க்கு உடையவன் வலுப்பெற்று இருந்தால், அந்த ஜாதகருக்குப் பொருளாதார ரீதியாக சரிவு ஏற்படுவதுடன், பெருத்த கடன்களையும் உண்டாக்கும். ஒவ்வொரு லக்னத்தைச் சேர்ந்தவர்களும் உரிய பரிகாரம் மூலம் கடன்களில் இருந்து விடுபடலாம்.

மேஷ லக்னம்: மேஷ லக்னத்துக்கு 6-ம் இடமான கன்னிக்கு உரிய கிரகம் புதன். புதன் கிரகம் கன்னியிலேயே வலுப்பெற்று அமைந்திருந்தால், ஜாதகருக்குக் கடன் சுமை உண்டாகும். இவர்கள், ராகு காலத்தில் துர்கைக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுவதுடன், ஏழை அந்தணருக்குப் பச்சை நிற வஸ்திரங் களைத் தானம் செய்யலாம்.

ரிஷப லக்னம்: ரிஷப லக்னத்துக்கு 6-ம் இடம் துலாம். துலாம் ராசிக்கு உரிய கிரகம் சுக்கிரன். சுக்கிரன் துலாமிலேயே வலுப் பெற்றிருந்தால், கடன்கள் ஏற்படும். இவர்கள், ஒருமுறை திருவரங்கனை தரிசித்து வருவதுடன், பளபளப்பான வெண்ணிற வஸ்திரம், மொச்சை போன்றவற்றை தானம் செய்வது சிறப்பு.

மிதுன லக்னம்: மிதுன லக்னத்துக்கு 6-க்கு உடைய செவ்வாய் 6-ம் இடமான விருச்சிகத்தில் வலுப்பெற்று இருந்தால், வைத்தீஸ்வரன்கோவில் செல்வ முத்துக்குமார சுவாமியை வழிபடுவதுடன், செந்நிற வஸ்திரம், துவரம்பருப்பு ஆகியவற்றை தானம் செய்யலாம்.

கடக லக்னம்: கடக லக்னத்துக்கு 6-க்கு உரிய குரு, தனுசு ராசியில் வலுப்பெற்றிருந்தால், திட்டை குருபகவானை வழிபடுவதுடன், பொன்னிற வஸ்திரத்தையும், கறுப்பு கொண்டைக் கடலையையும் தானம் செய்யலாம்.


சிம்ம லக்னம்: சிம்ம லக்னத்துக்கு 6-க்கு உடைய சனி 6-ல் வலுப்பெற்று இருந்தால், குச்சனூருக்குச் சென்று சனி பகவானுக்கு எள்ளெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவதுடன், ஏழை அந்தணருக்குக் கருநீல வஸ்திரம், எள், வெல்லம் போன்றவற்றை தானம் செய்யலாம்.

கன்னி லக்னம்: கன்னி லக்னத்துக்கு 6-க்கு உடைய சனி 6-ல் வலுப்பெற்று இருந்தால், திருநள்ளாறு சென்று சனீஸ்வரருக்கு அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். முன் சொன்னபடியே கருநீல வஸ்திரம், எள், வெல்லம் போன்றவற்றை ஏழை அந்தணருக்குத் தானம் செய்ய வேண்டும்.

துலா லக்னம்: துலா லக்னத்துக்கு 6-க்கு உடைய குரு மீனத்திலேயே வலுப்பெற்று இருந்தால், ஆலங்குடிக்குச் சென்று தட்சிணாமூர்த்தியை தரிசித்து, பொன்னிற வஸ்திரம், கறுப்பு கொண்டைக்கடலை போன்றவற்றை தானம் செய்வது விசேஷம்.

விருச்சிக லக்னம்: விருச்சிக லக்னத்துக்கு 6-க்கு உடைய கிரகமான செவ்வாய் மேஷத்திலேயே வலுப்பெற்று இருந்தால், திருச்செந்தூர் முருகப்பெருமானை வழிபட்டு, செந்நிற வஸ்திரம் மற்றும் துவரை போன்றவற்றை தானம் செய்வது சிறந்த பரிகாரம் ஆகும்.

தனுசு லக்னம்: தனுசு லக்னத்துக்கு 6-க்கு உரிய கிரகம் சுக்கிரன். இவர்கள் கஞ்சனூர் சென்று சுக்கிர பகவானுக்கு அர்ச்சனை செய்து வழிபடுவதுடன், மொச்சை, பளபளப்பான வெண்ணிற வஸ்திரம் போன்றவற்றை தானம் செய்யலாம்.


மகர லக்னம்: மகர லக்னத்துக்கு 6-க்கு அதிபதியான புதன் 6-ல் வலுப்பெற்று இருந்தால், திருவெண்காடு சென்று வழிபடுவதுடன், பச்சை நிற வஸ்திரம், பச்சைப்பயறு போன்றவற்றை தானம் செய்ய வேண்டும்.

கும்ப லக்னம்: கும்ப லக்னத்துக்கு 6-க்கு அதிபதி சந்திரன். இவர் கடகத்தில் வலுப்பெற்று இருந்தால், திங்களூருக்குச் சென்று சந்திரனுக்கு அர்ச்சனை செய்து, வெண்ணிற வஸ்திரம், பச்சரிசி தானம் செய்ய வேண்டும்.

மீன லக்னம்: மீன லக்னத்துக்கு 6-க்கு உரிய சூரியன் 6-ல் வலுப்பெற்று இருந்தால், சூரியனார்கோயிலுக்குச் சென்று அர்ச்சனை செய்து, ஆரஞ்சு நிற வஸ்திரம் மற்றும் கோதுமை தானம் செய்தால் நலம் உண்டாகும்.

மேலே சொன்ன பரிகாரங்களைச் செய்ய இயலாதவர்கள் ஆறு வாரங்களுக்குப் பசுவுக்கு வாழைப் பழங்களும், அகத்திக்கீரையும் தந்து வந்தால் கடன்களில் இருந்து சிறிது சிறிதாக நிவாரணம் பெறலாம்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!