பொங்கல் கொண்டாட சொந்த ஊர் திரும்பிய மறுநாளே நண்பர்களுக்கு நடந்த கொடூரம்..!


குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே உள்ள மயிலாடி மார்த்தாண்டபுரம் பகுதியை சேர்ந்தவர் பட்டுசாமி. இவருடைய மகன் சாய்ஹரிகரன் (வயது 22).

இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். தற்போது பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக கடந்த 2 நாட்களுக்கு முன் சொந்த ஊருக்கு வந்து இருந்தார். ஊருக்கு வந்த சாய் ஹரிகரன், தன்னுடைய நண்பர்களை சந்தித்து பேசி மகிழ்ந்தார்.

நேற்று முன்தினம் இரவு நண்பர்கள் அனைவரும் சினிமா பார்ப்பதற்காக நாகர்கோவிலுக்கு செல்ல முடிவு செய்தனர். அதன்படி 3 மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். அதில் ஒரு மோட்டார் சைக்கிளில் சாய் ஹரிகரனும், அவரது நண்பரான என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் முத்துராஜூம் (20) புறப்பட்டனர்.

இரவு 10 மணியளவில் சாய் ஹரிகரனும், முத்துராஜும் மயிலாடியை கடந்து சிறிது தூரம் சென்றபோது, நாகர்கோவிலில் இருந்து பெருமணல் நோக்கி ஒரு அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் அரசு பஸ்சும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இதில் சாய் ஹரிகரன், முத்துராஜ் ஆகிய 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். பலத்த காயமடைந்த முத்துராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சாய் ஹரிகரனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே சாய் ஹரிகரனும் பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த அஞ்சுகிராமம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம், சப்-இன்ஸ்பெக்டர் பிச்சை ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், இதுதொடர்பாக அரசு பஸ் டிரைவரான பொன்மனை பகுதியை சேர்ந்த ஜெகதீஷ்(30) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பொங்கல் பண்டிகை கொண்டாட சொந்த ஊர் திரும்பிய மறுநாளே வாலிபர் நண்பருடன் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!