“என் கணவரை கொன்னுட்டாங்க; மகனையும் கொலை செய்ய துடிக்கிறாங்க’ – இளம்பெண் கண்ணீர்

“என் கணவரை வெட்டிக் கொன்னுட்டாங்க. பத்தாதுத்துக்கு என்னையும், என் மகனையும் கொல்ல போறதா மிரட்டுறாங்க. ஆளுங்கட்சிகாரங்கங்கிறதால, போலீஸ் நடவடிக்கை எடுக்கமாட்டேங்குது. நீங்களாச்சும் நடவடிக்கை எடுக்குறீங்களா, இல்லைன்னா இங்கேயே மகனோடு மண்ணெண்ணெய் ஊத்திக்கிட்டு தற்கொலை செஞ்சுக்கட்டுமா?” என்று கண்ணீர்விட்டு கதறிய இளம் பெண்ணால் கரூரில்பரபரப்பு ஏற்பட்டது.

சரஸ்வதி

கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தனது மகனோடு வந்தார் சரஸ்வதி என்ற பெண். கையில் மனுவுடன் வந்த அவர், ‘என் கணவரை வெட்டிக் கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுங்க. இல்லைன்னா, இங்கேயே தற்கொலை பண்ணிக்குவோம்’ என்று கூச்சலிட்டார். இதனால், பதறிப்போன அங்கு காவலுக்கு இருந்த போலீஸார், ஓடோடி வந்து சரஸ்வதியை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால், அவர் ஆவேசமாக பேச, பெண் போலீஸை வைத்து, அவரை எஸ்.பி ராஜசேகரனிடம் அழைத்துச் செல்ல வைத்தனர். சற்று நேரத்தில் எஸ்.பியிடம் மனுக் கொடுத்துவிட்டு வெளியே வந்தார். அப்போதும் அழுகை குறையாமல், வெடித்து அழுதுகொண்டே இருந்தார்.

கரூர்

பின்னர் பத்திரிகையாளர்களிடம் கண்ணீர் மல்க பேசிய அவர், “கரூர் மாவட்டம், குளித்தலை அய்யர்மலை அருகே உள்ள சிவாயம் பகுதியில் வசித்து வருகிறேன். என் கணவர் பெயர் மகேஸ்வரன். எந்த வம்புதும்புக்கும் போகாத அவரை, கடந்த 5 தேதி சனிக்கிழமை அந்த பகுதியை சேர்ந்த ஆளுங்கட்சி புள்ளிகள் சிலர் சேர்ந்து வெட்டிக் கொலைசெய்துவிட்டனர். அனாதையாகிபோன நானும், என் மகனும், என் கணவரை கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கதறினோம். குளித்தலை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து 5 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். ஆனால், முக்கிய குற்றவாளிகளை போலீஸ் கைது செய்யவில்லை.

எனது கணவரை திட்டமிட்டு கொலை செய்த எதிரிகளை கைது செய்யாமல், பெயரளவில் சம்மந்தமே இல்லாத ஐந்து பேர்மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருவதாக சொல்கிறார்கள். ஆனால், என் கணவரை அநியாயமாக கொலை செய்த சம்பந்தப்பட்ட எதிரிகள் ஆளும் கட்சி பிரமுகர் என்பதால், காவல்துறையினர் கைது நடவடிக்கை மேற்கொள்ள தயங்குகின்றனர். அதோடு, அந்த நபர் எனக்கும், எனது மகனுக்கும் கொலை மிரட்டல் விடுக்கிறார். எனக்கு பாதுகாப்பு இல்லை.

காவல் ஆணையர் அலுவலகம்

எனது கணவரைக் கொலை செய்தவர்களை கைது செய்ய வேண்டும். எனக்கும், என் மகனுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும். குளித்தலை காவல்துறை குற்றவாளிக்கு ஆதரவாக செயல்படுகிறது. அதனால்,மாவட்ட எஸ்.பி. நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கையில் இங்கு வந்தேன். அவரும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், இங்கேயே குடும்பத்தோட தற்கொலை செய்துக்கொள்வேன்” என்றார். இளம்பெண் சரஸ்வதி தனது மகனோடு அதிரடியாக மனு கொடுக்க வந்ததால், கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. – Source: vikatan


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.