குதிரையின் குடலில் சிக்கிய கயிறு… 3½ மணி நேரம் அறுவை சிகிச்சை

நெல்லை மாவட்டம் தென்காசியை சேர்ந்தவர் ஜார்ஜ். இவர் தன‌து பண்ணை வீட்டில் 12 குதிரைகளை வளர்த்து வருகிறார். இவரிடம் உள்ள ஒன்றரை வயது பெண் குதிரை கடந்த 21 நாட்களுக்கு முன்பு வயிற்று வலியால் அவதிப்பட்டது. அங்கு சிகிச்சை அளித்தும் வயிற்று வலி சரியாகவில்லை.

இதையடுத்து ஜார்ஜ் அந்த குதிரையை நெல்லை ராமையன்பட்டியில் உள்ள அரசு கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்துக்கு கடந்த 2ந்தேதி அழைத்து வந்தார். கால்நடை ஆஸ்பத்திரி தலைவர் டாக்டர் ராம்பிரபு தலைமையில் குதிரைக்கு முழு உடல் பரிசோதனை செய்தனர்.

அப்போது குதிரைக்கு சாணம் போடுவதில் சிரமம் இருப்பதும், மேலும் குடல்கள் வீங்கி இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. குதிரையின் வயிற்றில் ‘ஸ்கேன்’ செய்து பார்த்ததில் குடலில் ஜீரணம் ஆகாத நைலான் கயிறு, பிளாஸ்டிக் உருண்டைகள் சிக்கியிருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து அறுவை சிகிச்சை துறை தலைவர் தர்மசீலன் தலைமையில் டாக்டர்கள் விஷ்ணு குருபரன், பாரதிதாசன், கோகிலா, நினு ஆகியோர் கொண்ட குழுவினர் குதிரைக்கு அறுவை சிகிச்சை செய்து அகற்றினர்.

இந்த சிகிச்சை மூன்றரை மணி நேரம் மேற்கொள்ளப்பட்டது. அதன் பிறகு 4 மணி நேரம் கழித்து குதிரை மயக்க நிலையில் இருந்து மீண்டும் எழுந்து நின்றது. 7 மணி நேரத்துக்குபின் குதிரை சாணம் போட்டு சகஜ நிலைக்கு வந்தது. இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்த டாக்டர்கள் குழுவிற்கு கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ஜாண்சன் ராஜேஷ்வர் பாராட்டு தெரிவித்தார்.

அறுவை சிகிச்சைக்குப்பின் சகஜ நிலைக்கு திரும்பிய குதிரை

இதுகுறித்து அறுவை சிகிச்சை துறை தலைவர் தர்மசீலன் கூறுகையில், “குதிரைக்கு குடலில் அறுவை சிகிச்சை என்பது இந்தியாவில் மிகவும் அரிதான ஒன்றாகும். நெல்லை அரசு கால்நடை மருத்துவ கல்லூரியில் முதன் முறையாக குதிரைக்கு இத்தகைய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது. குதிரையை உரிய நேரத்தில் கொண்டு வந்ததால் அறுவை சிகிச்சை செய்து உயிரை காப்பாற்றி உள்ளோம்” என்றார். – Source: Maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.