டிக்டாக்கில் காவல்துறைக்கு எதிராக அவதூறு! – இளைஞர்கள் கைது

தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனர் பசுபதிபாண்டியன் நினைவு தினம் ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 10-ம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதனையொட்டி பல்வேறு பகுதிகளில் இருந்தும் அவரது ஆதரவாளர்கள் ஏராளமானோர் தூத்துக்குடி மாவட்டம் மேலஅலங்காரத்தட்டு கிராமத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவர்கள் வாகனங்களில் சென்று வருவதற்கு காவல் நிலையத்தில் அனுமதிச்சீட்டு பெற வேண்டும். அதன்படி நேற்று நினைவு தினம் அனுசரிப்பதற்காக விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள துலுக்கபட்டி கிராமத்தில் இருந்து சிலர் செல்ல முயன்றனர். அதற்காகத் தங்களுடைய வாகனத்துக்கு அனுமதி பெறுவதற்காக சிவகாசி கிழக்கு காவல் நிலையத்துக்குச் சென்றனர்.

அப்போது துலுக்கபட்டியை சேர்ந்த முருகேசன், தங்கேஸ்வரன், ராமச்சந்திராபுரத்தை சேர்ந்த குருமதன் ஆகியோர் காவல் நிலையத்துக்குள் சென்றுள்ளனர். இந்தச் சம்பவத்தை சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் தனது கைப்பேசியில் படம் பிடித்துள்ளார். காவல்நிலையத்துக்குள் நுழையும்போது காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் டிக்டாக் செயலியில் சினிமா வசனங்களை இணைத்து காவல்துறை குறித்து அவதூறான கருத்துகளை வாட்ஸ் அப் மூலம் பரப்பியுள்ளார். இதையடுத்து, சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தும் வகையில் சமூகவலைதளத்தில் காவல்துறையினர் மீது அவதூறு பரப்பியதாக முருகேசன், தங்கேஸ்வரன், குருமதன், ஈஸ்வரன் ஆகிய 4 பேரை கைது செய்த காவல்துறையினர் அவர்களை நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தினர்.

அதேபோல வெம்பக்கோட்டை அருகே உள்ள தாயில்பட்டி கிராமத்தைச் சேர்ந்த குருசாமி, கருப்பசாமி, ராஜா, சண்முககுமார், ராஜேஸ்வரன், மகாராஜா, ஹரிஹரபிரபு, சங்கிலிமாடசாமி, கணேஷ்குமார் ஆகியோர் வாகனத்தில் பசுபதிபாண்டியன் நினைவிடம் செல்வதை கைப்பேசியில் படம் பிடித்து டிக்டாக் செயலியில் சாதி கலவரத்தைத் தூண்டும் வகையில் வசனங்களைப் பேசி வாட்ஸ் அப் மூலம் பரப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த வெம்பக்கோட்டை காவல்துறையினர் 9 பேரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். – Source: vikatan


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.