அகப்பட்டுக் கொண்டவனுக்கு அட்டமத்து சனி.. ரிஷப ராசிக்காரர்களே அச்சப்பட வேண்டாம்..!


டிசம்பர் 19 ஆம் தேதி சனிபகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்குப் பெயர்ந்து செல்கிறார். இந்த சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு சனிபகவான் பார்க்கும் கிரக நிலைகளைப் பொருத்து ஒவ்வொரு ராசிக்கும் நன்மைகளும் தீமைகளும் உண்டாகும்.

அந்தவகையில், இந்த சனிப்பெயர்ச்சியில் இருந்து ரிஷப ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.

ரிஷப ராசிக்காரர்களுக்கு அஷ்டசனி தொடங்குகிறது. ஓடிப் போனவனுக்கு ஒன்பதில் குரு, அகப்பட்டுக் கொண்டவனுக்கு அட்டமத்து சனி என்ற பழமொழி தமிழில் உண்டு. அஷ்டமச் சனி என்றவுடன் எல்லோருக்குமே ஒருவித பயம் உண்டாகும். மேலும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடந்த குருப்பெயர்ச்சியில் குருவும் சாதகமற்ற ஆறாமிடத்திற்குதான் மாறி இருக்கிறார் என்ற நிலையில் தற்போது இன்னொரு நன்மைகளைத் தராத மாற்றமான எட்டாம் இடத்துக்கு மாறும் சனி என்றவுடன் ரிஷப ராசிக்காரர்களுக்கு ஒருவிதமான மனக்கலக்கம் உண்டாகும்.

பொதுவாக சனிபகவான் ஒருவருக்குத் தண்டனைகளைத் தர விதிக்கப்பட்ட கிரகம் என்றாலும் 12 ராசிகளுக்கும் அவர் ஒரே மாதிரியான தண்டனைகளையோ அல்லது கெடுபலன்களையோ தந்து விடுவது இல்லை. தான் இருக்கும் இடத்தைப் பொருத்தும், எந்த ராசிக்கு தான் பலன்களை அளிக்கப் போகிறோம் என்பதை பொருத்தும் தான் சனிபகவான் தனது நல்ல, கெட்ட பலன்களைச் செய்வார்.


அந்தவகையில் பார்த்தால், கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக குறிப்பாக 2013-2014 ம் ஆண்டுகளில் மீன ராசிக்காரர்கள் அஷ்டமச்சனியின் ஆதிக்கத்தினால் ஏராளமான கஷ்டப்பட்டிருக்கிறார்கள். அதேபோல கடந்த 2 ஆண்டுகளாக மேஷ ராசிக்காரர்கள் பட்ட துயரங்களும் அதிகம்.

ஆனால் தற்போதைய பெயர்ச்சியின் மூலம் தனக்கு மிகவும் பிடித்த வீடான, தான் பெரிதும் சாந்தமடைகின்ற ஒரு புனித ராசியான தனுசுக்கு சனிபகவான் இடம் பெயர்கிறார். தனுசில் அவர் இருக்கும் நிலையில் அவர் அமைதியான குணத்தை கொண்டிருப்பார் என்பதால் ரிஷப ராசியினருக்கு தாங்க முடியாத கெடுபலன்கள் எதுவும் உறுதியாக வரப்போவது இல்லை.

கடந்த ஐந்து ஆண்டுகளில் மீன, மேஷ ராசிக்காரர்களுக்கு நடந்த சாதகமற்ற, சங்கடமான பலன்கள் எதுவும் ரிஷப ராசிக்கு இருக்காது.

இன்னொரு முக்கியமான விஷயமாக ரிஷப ராசியின் ராஜ யோகாதிபதி சனி பகவான் மட்டும்தான். ஒரு கிரகம் யோகம் தர விதிக்கப்பட்ட ராசிகளுக்கும், தான் அதிபதியாகும் ராசிகளுக்கும் கெடுபலனை தராது என்பது ஒரு முக்கிய ஜோதிட விதி.


அதன்படி பார்த்தால் ரிஷப ராசிக்காரர்களுக்கு அனைத்து விதமான பாக்கியங்களையும், தன்மைகளையும் தர விதிக்கப்பட்டவர் சனிபகவான். ஆகவே அவர் தண்டனைகளைத் தருகின்ற ஒரு பொதுவான கிரகம் என்றாலும் நல்லவைகளையும் தரக்கூடிய ராஜயோகாதிபதி என்பதால் ரிஷபத்தின் மேல் சனிக்கு எப்போதும் ஒரு மென்மையான போக்கு தான் உண்டு.

எந்த ஒரு காரணத்தினாலும் மற்ற ராசிகளுக்கு அஷ்டமச் சனியில் நடக்கின்ற கெடுபலன்கள் எதுவும் தற்போதைய சனிப் பெயர்ச்சியால் உறுதியாக ரிஷபத்துக்கு வராது. ஆயினும் வரும்முன் காக்க வேண்டியது அவசியம். புதிய தொழில் தொடங்குமு் முயற்சி இருந்தால் கைவிடவும்.

எனவே இன்றைய குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி நிலைப்படி இளைய பருவத்தினர் தங்களுடைய வேலை, தொழில், வியாபாரம் போன்ற அமைப்புகளில் எந்த விதமான முயற்சியும் எடுக்காமல் இருப்பது நல்லது.

பேராசையைக் கைவிட்டு, மனதைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்வது நல்லது.

அஷ்டமச் சனியின் பாதிப்புகள் முப்பது வயதுகளில் இருப்பவர்களுக்கு மட்டுமே அதிகமாக இருக்கும். அவர்களைத் தொழில், வேலை, திருமணம் போன்றவற்றில் தடங்கலை ஏற்படுத்தும். அவர்களுக்கு வாழ்க்கையைப் பற்றிய சில படிப்பினைகளைத் தரும்.

நடுத்தர வயதுக்காரர்களுக்கு நிச்சயமாக பெரிய கெடுதல்கள் எதுவும் கண்டிப்பாக இருக்காது. அவர்களுக்கு பொருளாதார சிக்கல்கள் வர வேண்டும் என்பதால் தொழில், வேலை விஷயங்களில் மட்டும் சில இடையூறுகளை சனிபகவான் தருவார்.


சனிபகவான் தனது மூன்றாம் பார்வையால் ஜீவனஸ்தானத்தை பார்ப்பதால் தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் சாதகமற்றவை செய்வார். குறிப்பாக அஷ்டமச்சனி நேரத்தில் பணமின்றி நீங்கள் கஷ்டப்பட வேண்டும் என்பதால் பணத்தைத் தரும் அமைப்புகளை சனிபகவான் பாதிப்பார். எனவே வேலையில் இருப்பவர்கள் மிகுந்த கவனமாகவும் இருக்க வேண்டிய காலகட்டம் இது.

மேலதிகாரிகளிடம் சச்சரவுகளைத் தவிர்க்க வேண்டும். அவர்களின் பேச்சைக் கேட்டு நடந்து கொள்வது நல்லது. இந்த நேரத்தில்தான் பணச் சிக்கல்களும், கடன்தொல்லைகளும் வந்து முறைகேடான வருமானத்துக்கு ஆசைவரும் என்பதால் குறிப்பாக அரசுப் பணியாளர்கள் இதர வருமானங்கள் வரக் கூடிய நேரத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

வேலையிழப்பு, தற்காலிக பணிநீக்கம் போன்ற அபாயங்கள் இருப்பதால் எதிலும் கவனமாக இருக்க வேண்டும். இந்தக் காலகட்டத்தில் யாரையும் நம்ப வேண்டாம். சுவருக்குக்கூட கண்களும், காதுகளும் இருக்கின்றன என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

வியாபாரிகளுக்கு வியாபாரம் சுமராகத்தான் இருக்கும். எதிரில் போட்டிக்கடை உருவாகும். இத்தனை காலம் உங்களிடம் வாடிக்கையாளராக இருந்தவர்கள் எதிர்க்கடைக்குச் சென்று உங்கள் வியாபாரத்தைக் குறைய வைப்பார்கள். எல்லாம் கொஞ்ச காலத்திற்குத்தான் என்பதை அறிந்து கொண்டு பொறுமையாக இருங்கள்.

அஷ்டமச் சனி நடக்கும்போது மாணவர்கள் மற்றும் இளையவர்களுக்கு சோம்பலும், விரக்தி மனப்பான்மையும் வரும் என்பதால் இளைய பருவத்தினர் மற்றும் மாணவர்கள் படிப்பையும், தங்களுக்குண்டான வேலையையும் மட்டும் அக்கறையுடன் கவனிப்பது நன்மைகளைத் தரும்.

சிலருக்கு இந்த நேரத்தில் படிப்பதை தவிர வயதுக்கேற்ற மற்ற விஷயங்களில் ஆர்வம் வந்து முடிவில் துன்பத்தில் கொண்டு போய் விட்டு விடும் என்பதால் இது போன்ற எண்ணங்களை மூட்டை கட்டி மூலையில் வைத்து விட்டு எதிர்காலம் நன்றாக இருப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டால் உங்கள் வாழ்வு சிறக்கும் என்பது உறுதி.


நிலம் வீடு போன்றவைகளை வாங்கும்போது வில்லங்கம் சரியாகப் பார்க்கவும். வில்லங்கம் உள்ள இடத்தை தெரியாமல் வாங்கிவிட்டு பின்னால் கோர்ட் கேஸ் என்று அலைய வாய்ப்பிருப்பதால் ஆரம்பத்திலேயே அனைத்திலும் உஷாராக இருங்கள்.

இருக்கும் வீட்டை விற்று விட்டு புதிய வீடு வாங்குவது, வீட்டை இடித்துக் கட்டுவது, புதுவீடு வாங்குவது போன்ற விஷயங்களில் இப்போது அவசரம் காட்டவேண்டாம். இருக்கும் வீட்டை விற்று, வீடு விற்ற பணம் வேறுவகையில் செலவாகி, இருந்த சொந்த வீடு போய் வாடகை வீட்டில் குடியிருக்கச் செய்வார் சனி என்பதால் கவனமுடன் இருங்கள். அவசரப்படாதீர்கள்.

பரிகாரம்

சனிக்கிழமை தோறும் அருகில் உள்ள பழமையான ஈஸ்வரன் கோவிலில் உள்ள காலபைரவருக்கு மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றுங்கள். அதற்கு பதிலாக, ஸ்ரீராமதாசன் ஹனுமானின் சந்நிதியில் சனிக்கிழமை தோறும் நெய்தீபம் ஏற்றுங்கள். அஷ்டமச்சனியின் கடுமை குறையும்.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!