நான் ஏன் இங்கே இருக்கிறேன்? எப்போது என் குழந்தையை ஏந்துவேன்! – மனிஷா உருக்கம்..!


”1942: ஏ லவ் ஸ்டோரி திரைப்படத்துக்காக ஸ்கீரின் டெஸ்ட் முதல்முறை செய்யும்போது, நீ மிகவும் மோசமான நடிகை என்று கூறினார் இயக்குநர் விது வினோத் சோப்ரா.”

இந்திய திரையுலகில் 90களில் முன்னணி நடிகையாக விளங்கிய மனிஷா கொய்ராலா, “Healed: How Cancer Gave Me A New Life”, என்ற புத்தகத்தை இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடவுள்ளார்.

தனக்கு கருப்பைப் புற்றுநோய் தாக்கிய காலகட்டத்துக்கு முன்பும் பின்பும் வாழ்க்கையை எப்படி எதிர்கொண்டார் என்பதைப் பற்றி, பிரபல ஆங்கில எழுத்தாளர் நீலம் குமாருடன் இணைந்து விரிவாக எழுதியிருக்கிறார் மனிஷா. திரைப்படங்கள், பார்ட்டி, கொண்டாட்டம், திருமணம், விவாகரத்து எனப் பல ஏற்றத்தாழ்வுகள் நிறைந்திருந்த மனிஷாவின் வாழ்க்கை புரட்டிப்போட்டது புற்றுநோய்.

2012-ம் ஆண்டு கண்டறியப்பட்ட கருப்பைப் புற்றுநோய் பாதிப்புக்குப் பின்னர், தான் வாழ்க்கையைப் பார்க்கும் விதமே மாறியது என்று கூறும் மனிஷா, 2013-ம் ஆண்டு முழுமையாக குணமடைந்து, மீண்டும் தற்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது இவர் எழுதியிருக்கும் புத்தகத்தில், இவையனைத்தையும் சுயவிமர்சனத்துடன் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.

பாலிவுட்டில் ஆரம்ப காலகட்டத்தைப் பற்றி தன் புத்தகத்தில், “1942 : லவ் ஸ்டோரி திரைப்படத்துக்காக ஸ்கீரின் டெஸ்ட் முதல்முறை செய்யும்போது, நீ மிகவும் மோசமான நடிகை” என்று கூறினார் இயக்குநர் விது வினோத் சோப்ரா. அவரிடம்,“எனக்கு 24 மணிநேரம் கொடுங்கள். நான் மறுபடியும் நடித்துக் காட்டுகிறேன்” என்றேன். அந்த 24 மணிநேரம், அந்தத் திரைப்படத்தின் வசனங்கள் வெறித்தனமாக பயிற்சி செய்தேன்.


என்னைப் பார்த்த என் அம்மா, “நீ என்ன செய்துகொண்டிருக்கிறாய்? அந்தத் திரைப்படத்தில் உனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், பரவாயில்லை. உன்னை நீயே கொன்றுவிடாதே”, என்று பயந்துபோய் கூறினார்.

மறுநாள், நான் இயக்குநரிடம் நடித்துக்காட்டினேன். விது சார் என்னைப் பார்த்து, “நேற்று நீ ஸீரோ; இன்று நீ உன்னுடைய 100 சதவிகித உழைப்பைக் கொடுத்திருக்கிறாய். இதேபோல நடித்தால், இந்தப் படத்தில் மாதுரி தீக்ஷித்துக்குப் பதிலாக உன்னை நடிக்க வைக்கிறேன்!” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

தன் சொந்த ஊரான காந்துமாண்டுவில், புற்றுநோய் கண்டறியப்படுவதற்கு சில நாள்கள் முன், சர்வதேச மருத்துவமனையின் முன், எப்படியான மன ஓட்டத்தில் இருந்தார் என்பதையும் குறிப்பிட்டிருக்கிறார்.

அவர் மருத்துவமனையிலிருந்தபோது, “நான் ஏன் இங்கே இருக்கிறேன்? அந்தச் சாலையின் எதிரில் இருக்கும் மகப்பேறு மருத்துவமனையில் ஏன் இல்லை? நான் ஏன் பிரசவதந்துக்காக அனுமதிக்கப்படவில்லை? எப்போது என் கைகளில் என் குழந்தையை ஏந்துவேன்?” என்று தன் உணர்வுகளையும் குறிப்பிட்டிருக்கும் மனிஷா, தனக்கு எப்போது பொறுமை இருந்ததில்லை என்றும் எழுதியிருக்கிறார்.

இந்தப் புத்தகத்தை மும்பையில் பிரபல எழுத்தாளர் ஷோபா டே முன்னிலையில் மனிஷா கொய்ராலா வெளியிடவுள்ளார்.-Source: vikatan

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!