வெளிநாடு செல்ல மறுத்த டெய்லரை கார் ஏற்றி கொன்ற மைத்துனர்கள்..!


ஆவடியில் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல மறுத்ததால் டெய்லர் மீது கார் ஏற்றி கொலை செய்த மைத்துனர் கைது செய்யப்பட்டார். விபத்து என மூடி மறுத்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. ஆவடி, புதுநகரை சேர்ந்தவர் முபாரக் அலி (38)டெய்லர். இவரது மனைவி சபூர்நிஷா(32). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த அக்டோபர் 10ம் தேதி இரவு முபாராக் அலி, அதே பகுதி காமராஜர் நகர், தனியார் பள்ளிக்கூடம் அருகே மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த கார் மோதி அவர் படுகாயம் அடைந்தார்.

அவரை அப்பகுதியினர் சென்னை, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி முபராக் அலி இறந்தார். புகாரின் பேரில், பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், முபாராக் அலி இறந்தது எதேச்சையாக நடந்த விபத்தில்லை என்பது தெரியவந்தது.

மேலும், அவர் குடும்ப பிரச்னை காரணமாக காரை ஏற்றி கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: முபாரக் அலி வெளிநாடு செல்ல திட்டமிட்டிருந்தார். அதற்காக அவரது உறவினர் ஒருவர் மூலம் குவைத் நாட்டில் வேலைக்கு செல்ல கடந்த அக்டோபரில் விசா வந்தது. இதன் பிறகு, அவர் குவைத் நாட்டிற்கு செல்ல விருப்பம் இல்லை எனக் கூறி உள்ளார். இது குறித்து, சபூர்நிஷா தனது சகோதரர்களான பாடி, டி.எம்.பி நகர், அவ்வை தெருவை சார்ந்த சதக்கத்துல்லா (33) மற்றும் சென்னை, அமைந்தகரையில் வசிக்கும் அப்துல் ரகுமான் (27) ஆகியோரிடம் கூறி வருத்தப்பட்டு உள்ளார்.

இதனையடுத்து, கடந்த அக்டோபர் 10ம் தேதி இருவரும் காரில் சபூர்நிஷா வீட்டுக்கு வந்துள்ளனர். பின்னர், அங்கிருந்த முபாரக் அலியிடம் குவைத்திற்கு ஏன் வேலைக்கு செல்ல முடியாது என கூறுகிறீர்கள் என வாக்குவாதம் செய்துள்ளனர். இதில், ஆத்திரமடைந்த முபாரக் அலி, அவர்கள் வந்த காரின் கண்ணாடியை உடைத்து உள்ளார். பின்னர், அவர் அங்கிருந்து தனது மொபட்டை எடுத்துக்கொண்டு வெளியே சென்று விட்டார். இதனையடுத்து, அவரை பின்னால் சதக்கதுல்லா, அப்துல் ரகுமான் இருவரும் காரில் விரட்டி சென்று காமராஜ் நகர் பகுதியில் காரை கொண்டு மொபட் மீது மோதி விட்டு தப்பிச் சென்றுவிட்டனர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து போக்குவரத்து போலீசார் இந்த வழக்கை ஆவடி காவல் நிலையத்திற்கு நேற்று அனுப்பி வைத்தனர்.

இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து சதக்கதுல்லாவை கைது செய்தனர். மேலும், இந்த வழக்கு சம்பந்தமாக அப்துல் ரகுமானை போலீசார் தேடி வருகின்றனர். வெளிநாடு செல்ல மறுத்த டெய்லரை கார் ஏற்றி மைத்துனர்கள் கொலை செய்தது ஆவடி பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.-Source: dinakaran

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!