தொடர்ந்து மாதவிடாயைத் தள்ளிப்போடும் மாத்திரைகளை உட்கொள்பவரா..? – முதலில் இதை படிங்க..!!


குடும்ப நிகழ்ச்சிகள், பண்டிகைகள் வரும் நாள்களில் மாதவிடாயைத் தள்ளிப்போடும் மாத்திரைகளைப் பின்விளைவுகள் அறியாமல் உட்கொள்கிறோம். சரியான மருந்துவ ஆலோசனைகள் இல்லாமல், உட்கொள்ளும் மாத்திரைகளால் என்னென்ன பின்விளைவுகள் ஏற்படுகின்றன என்பதை பற்றி பார்க்கலாம்.

‘நோரேதிஸ்ட்ரோன் அசிட்டேட்’ (Norethisterone Acetate), ‘மெட்ராக்ஸிப்ரோஜெஸ்ட்ரோன் அசிட்டேட்’ (Medroxyprogesterone Acetate) மற்றும் ‘அலிலெஸ்ட்ரினால்’ (Allystrenol) இவையே மாதவிடாயைத் தள்ளிப்போடப் பரிந்துரைக்கப்படும் மாத்திரைகள். சீரான மாதவிடாய் ஏற்படுத்தவும் இதே மாத்திரைகள் பயன்படுத்தப்படுகின்றன.

மாதவிடாயைத் தள்ளிப்போடும் மாத்திரைகளை வரையறையில்லாமல் உட்கொண்டால், மாதவிடாய் ஏற்படுவது தற்காலிகமாக நின்றுவிடும் அல்லது மாதவிடாய்ச் சுழற்சியில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படும்.


20 வயதுக்குள் இருக்கும் இளம்பெண்கள், மாதவிடாயைத் தள்ளிப்போடும் மாத்திரைகளைத் தவிர்ப்பது நல்லது. 20 வயது தாண்டிய பெண்கள், தவிர்க்க முடியாத சூழ்நிலையில் மட்டுமே இந்த மாத்திரைகளைப் பயன்படுத்த வேண்டும்.

தோல் அரிப்பு, அலெர்ஜி, நுரையீரல் நோய், மார்பகப் புற்றுநோய், நீரிழிவு நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த மருந்துகளை உட்கொள்ளக் கூடாது.

இந்த மருந்துகள் ஏற்படுத்தும் பின்விளைவுகளும் யாரெல்லாம் பயன்படுத்தக் கூடாது என்பதும் மருந்து அட்டையிலேயே பரிந்துரைக்கப்பட்டிருக்கும். மாத்திரைகளை உட்கொள்ளும் முன்பு, ஒருமுறை இந்தத் தகவல்களையும் பார்த்துக்கொள்ளவும்.


மாதவிடாயைத் தள்ளிப்போடும் மாத்திரைகளை எடுக்கும்போது ஆரம்பகால கட்டத்தில், வாந்தி வருவது போன்ற உணர்வு, மூச்சுத்திணறல், தலைவலி போன்றவை ஏற்படும். சிலருக்கு ஆழமான நரம்பு ரத்த உறைவு, உறைகட்டி, மார்பக வீக்கம் போன்ற தீவிரமான பின்விளைவுகளும் ஏற்படலாம்.

வருடத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை மட்டுமே இந்த மாத்திரைகளைப் பயன்படுத்த வேண்டும்.

மாதவிடாய் வருவதற்கு மூன்று நாள்களுக்கு முன்பு, இந்த மருந்துகளைத் தொடர்ந்து ஐந்து நாள்களுக்குப் பயன்படுத்தலாம். அதன் பிறகு ஐந்து முதல் பத்து நாள்களுக்குள் மாதவிடாய் வருவதுதான் இயல்பு. அதற்குப் பிறகும் மாதவிடாய் தள்ளிப்போனால் உடனடியாக மருத்துவரிடம் ஆலோசனை கேட்க வேண்டும்.

மைக்ரேன் தலைவலி இருப்பவர்கள், சீரான மாதவிடாய் இல்லாதவர்கள் இந்த மாத்திரைகளைத் தவிர்க்க வேண்டும். ஏனென்றால், இந்த மருந்துகளை உட்கொண்ட பின்னர், நாள் தள்ளி வரும் மாதவிடாயின்போது, மைக்ரேன் தலைவலி வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. சீரான மாதவிடாய் இல்லாதவர்களுக்கு, மாதவிடாய் வரும் காலத்தில் அதிகமான உதிரப்போக்கும் ஏற்படலாம்.-
Source: Maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!